100அடியை எட்டுகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்… நீர் வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், (காலை 11 மணி நிலவரம்)   அணையின் நீர்மட்டம் 99.90 அடியாக உள்ளது.

பருவமழை மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் காரணமாக காவிரில் தண்ணீர் அதிகரித்துள்ளது.   இதனால், நேற்று காலை  99.11 அடியாக  இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 99.90 ஆக அதிகரித்துள்ளது. இது இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணை நிரம்ப கூடிய அபாயம் ஏற்படும் என்பதால் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்பொழுது கொள்ளளவு 93.45 டிஎம்சி ஆக உள்ளது. வினாடிக்கு 26 ஆயிரத்து 102 கன அடியிலிருந்து 27 ஆயிரத்து 212 கன அடியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி வினாடிக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.