மேட்டூர்:

மேட்டூர் உபரி நீர் திட்டம் ஒரு வருடத்தில் நிறைவடையும் என்று விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க. அரசு என்று கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, மேட்டூரில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமினை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவி களை வழங்கினார். அப்போது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் மக்கள் ஒப்பிட்டு பார்த்து எந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்பதை முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஏற்கனவே நான் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, சங்ககிரி, வீரபாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதியிலுள்ள பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றையதினம் மேட்டூர், இதற்குப் பிறகு ஓமலூர் செல்லவிருக்கின்றேன்.

இந்தத் திட்டத்தின் வாயிலாக, நீண்டகாலமாக தீர்க்கமுடியாமல் இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல், என்ன காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்பதையும் அவர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்படும்.

பொதுமக்களின் மனுக்களில் பெரும்பாலானவை முதியோர் உதவித் தொகை கோரி வழங்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உழைக்கும் திறனற்ற, வயது முதிர்ந்த முதியோர்களுக்கு அரசு உதவி செய்யவேண்டுமென்ற அடிப்படையில் சுமார் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித் தொகை அளிக்க வேண்டுமென்று முடிவெடுத்துள்ளோம்.

இன்றைக்கு தமிழகம் முழுவதும் கழக அரசால் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இன்றைக்கு இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஒரு தவறான குற்றச்சாட்டை அவர் செல்கின்ற இடங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் பேசி வருகிறார்.

2011–ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா பொறுப்பேற்றதிலிருந்து 2019–ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளில் மேட்டூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். (மேட்டூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகளை புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டார்.)

83 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணையை தூர்வாரி சரித்திரம் படைத்த அரசு எங்களுடைய அரசு. முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் வந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தேன். இதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து தங்கள் விளைநிலங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீரை சேமிக்கும் வகையில், தொலைநோக்குச் சிந்தனையோடு, ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது முழுக்க, முழுக்க விவசாயிகளைக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை குறை கூறும் எதிர்க்கட்சியினர், அவர்கள் ஆட்சி காலத்தில் ஒரு ஏரியைக்கூட தூர்வாரவில்லை. பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிக்கப்படும் சுமார் 14,000 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் பராமரிக்கப்படும் சுமார் 26,000 ஏரிகள், ஆக மொத்தம் தமிழ்நாட்டில் இன்றைக்கு 40,000 ஏரிகள், குளங்கள் உள்ளன.

இவைகளை படிப்படியாக தூர்வாரும் வகையில் குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கி, குறிப்பிட்ட ஏரிகளை எடுத்துக் கொண்டு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ரூபாய் 100 கோடியும், இரண்டாம் கட்டமாக ரூபாய் 328 கோடியும் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு, 1,829 பொதுப்பணித் துறை ஏரிகளை தூர்வாருவதற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாருவதற்கு ரூபாய் 1,250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், சிறப்பான இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சியினர் குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் கடலில் வீணாக கலப்பதைத் தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணைகள் கட்டினார்கள்? தமிழகத்திலே அதிக ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் துரைமுருகன் தான். ஆனால், ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. எதுவுமே செய்யாத ஸ்டாலின் எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

புரட்சித் தலைவி அம்மா, மேட்டூரிலிருந்து உபரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக ஆதனூர் குமாரமங்கலம் என்ற இடத்திலே மேற்கொள்ள வேண்டும் என அம்மா அறிவித்தார். அதனை நாங்கள் இன்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்கு தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் புதிய, புதிய தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்ததை நீக்கி, மூன்றே ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கியவர் அம்மா. நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபொழுது, அங்குள்ள தொழிலதிபர்கள் – இன்றைக்கு தமிழ்நாடு வளம் கொழிக்கும் மாநிலமாகவும், தொழில் தொடங்க உகந்த மாநிலமாகவும் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்கள். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்க 41 தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கின்றார். புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க வேண்டும். அதற்காகத் தான் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளுக்கு போதிய நீர் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வேளாண்மைத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கொங்கனபுரத்திற்கு அருகிலுள்ள கச்சுப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, “மேட்டூர் உபரி நீர் திட்டம் சுமார் 565 கோடி டாலர் செலவில் செயல்படுத்தப்படும். திட்டத்தின் பணிகள் ஐந்து மாதங்களில் தொடங்கி ஒரு வருடத்தில் நிறைவடையும். இரண்டு ஆண்டுகளில்,  சேலம் மாவட்டத்தில் நீர்நிலைகள் உபரி நீரில் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

2006–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், 2011–ம் ஆண்டு முதல் 2019–ம் ஆண்டு வரை அம்மா ஆட்சியில் நிறை வேற்றப்பட்டுள்ள திட்டங்களையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து, எந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

மேட்டூரில் 16 கண் பாலம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பவானி யிலிருந்து மேட்டூர் வரை, மேட்டூரிலிருந்து தொப்பூர் வரையிலான சாலையினை விரிவாக்கம் செய்யவதற்கான நிலஎடுப்புப் பணி முடிந்தவுடன் விரைவில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். 8 ஆண்டுகளில் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் கூட்டுறவுத்துறையின் மூலம் மொத்தம் 5,32,166 நபர்களுக்கு ரூபாய் 1,871.99 கோடி பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அரசு மக்களின் அரசு, மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற அரசு. இந்த அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.