மெக்ஸிகோசிட்டி: தனது நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, அமெரிக்காவுடனான தனது எல்லையை மூடுவதற்கு உத்தேசித்து வருகிறது மெக்ஸிகோ.

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை என்பது உலகளவில் ஊடுருவலுக்கு பெயர் பெற்றது. கொரோனா வைரஸ் அமெரிக்கா வழியாகத்தான் மெக்ஸிகோவிற்குள் நுழைந்தது என்று கருதப்படுகிறது.

ஏனெனில், அமெரிக்காவில் இதுவரை அந்த வைரஸால் 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் இறந்துபோன நிலையில், மெக்ஸிகோவில் இதுவரை 16 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இறப்பு எதுவும் நிகழவில்லை.

கொரோனா வைரஸை, மெக்ஸிகோ அமெரிக்காவில் பரப்பவில்லை என்றும், அமெரிக்காதான் மெக்ஸிகோவில் பரப்பியது என்றும் மெக்ஸிகோவின் சுகாதார அமைச்சர் ஹுகோ லோபெஸ்-கேடெல் தெரிவித்துள்ளார்.

“மேலும், வடக்கிலிருந்துதான் தெற்கே வந்துள்ளது அந்த வைரஸ். அவசியமென்றால், தடுப்புமுறைகள் மற்றும் வலுவான கண்காணிப்பு ஆகியவற்றை நாங்கள் மேற்கொள்வோம்” என்று மேலும் கூறினார் அவர்.