ஜூசிடான் :

மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின், அண்டை நாடான, மெக்சிகோவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.2 புள்ளியாக பதிவாகியது.

இந்த நிலநடுக்கம் காரணமாக தெற்கு கடலோர மாகாணங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மெக்சிகோ கடற்கரை பகுதியில் 3 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. மெக்சிகோ, சியாபஸ், ஒக்சாகா மாகாணங்களைச் சேர்ந்த பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தஞ்சமடைந்தனர். மெக்சிகோ ராணுவத்தினர், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் 2 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சியாபஸ் மாகாணம், ஜூசிடான் நகரில், இடிபாடுகளில் இருந்து பல உடல்கள் மீட்கப்பட்டன. மெக்சிகோ, டபாஸ்கோ மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 90 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.