20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உறுதியேற்கும் மெக்சிகோ அதிபர்!

--

மெக்சிகோ: கொரோனா ஊரடங்கால் மெக்சிகோவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ள நிலையில், அதை ஈடுசெய்யும் வகையில், இனிவரும் நாட்களில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றுள்ளார் மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார்.

அவர் கூறியதாவது, “மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கொரோனா பரவல் குறைந்தாலும், அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் இடம்பெறாத அத்தனை வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. இதன்மூலம் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன.

மில்லியன் கணக்கான மக்களின் வேலை வாய்ப்புகள் முடங்கினாலும், இனிவரும் நாட்களில் புதிதாக 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம் மக்களின் பொருளாதார நிலை மேம்படும்; நாடும் பொருளாதார சிக்கலில் இருந்து தப்பும்” என்றார்.

மெக்சிகோவில் இதுவரை 68,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 7,394 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.