நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

அண்ணன் அல்ல..அதற்கும் மேலான ஆசான்..

கும்பி எரியுது.. குடல் கருகுது.. கோலேசா ஆட்சி உனக்கு ஒரு கேடா?

நேருவையும் காமராஜரையும் பார்த்து 1960களில் திமுக மேடைகளில் அதிகம் பேசப்பட்ட பேச்சு. காங்கிரசுக்கு எதிரான இன்னும் பல மேடைப் பேச்சுகளை அப்படியே வசனமாக வைத்து, மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சிக்கு பாடும்படும் ஒருவனின் கதையை இயக்கினார் ஒருவர்.

அந்த படம் அரசகட்டளை, ஜெயலலிதாவும் சரோஜா தேவியும் இணைந்து நடித்த ஒரே படம். எம்ஜிஆருடன் சரோஜா தேவி நடித்த படமும் அதுதான், எம்ஜிஆர் சுடப்பட்டு உயிர் பிழைந்தபின் நடித்து வெளியான முதல்படமும் அதுதான். அந்த படத்தை தயாரித்து இயக்கியவர் வேறு யாருமல்ல, மக்கள் திலகம் எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்ரபாணி..

சிறுவனாய் இருக்கும்போதே இலங்கையில் தந்தையையும் சகோதரியையும் பறிகொடுத்தவர். பட்ட காலிலே, படும் கெட்ட குடியே என்பது பொய்க்காமல் குடும்பத்தை வறுமை வேறு சூழ்ந்துகொண்டது..

தந்தை மேஜிஸ்ட்ரேட்டாய் இருந்தபோது வளத்தில் புரண்ட குடும்பம், வாழ்ந்துகெட்ட வறண்டநில குடும்பமாய் பரிதாப வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டது
பன்னாளில் சக்ரபாணி என அழைக்கப்பட்ட நீலகண்டன் என்ற சிறுவன் தாய் சத்யாவோடும் தம்பி ராமச்சந்திர னோடும் தமிழகத்திற்கு வந்தபோது இதுதான் நிலைமை….
.
தாயம் தம்பியும் சாப்பாட்டுக்காக நம்பியிருந்தது நீலகண்டனின் உழைப்பைத்தான்..அதனாலேயே ஏழாம் வகுப்போடு முடிந்தது பள்ளி வாழ்க்கை.

நாடகங்களில் வேஷம் கட்டி சோற்றை பார்க்க ஆரம்பித்த சிறுவனுக்கு. பெயர் மாற்றம் நடந்து சக்ரபாணி ஆகிப்போனான்..பலர் உதவினாலும் சக்ரபாணிக்கு கடைசியில் நன்றாக உதவிய அந்த நல்ல உள்ளம், மெட்ராஸ் கந்தசாமி முதலியார் என்ற நாடக ஜாம்பாவன்..

இவருடைய மகன்தான் எம்.கே. ராதா. ஜெமினி நிறுவனம் பிரமாண்டமாக எடுத்து 1948ல் இந்தியாவையே கலக்கிய சந்திரலேகா படத்தின் ஹீரோ.. அபூர்வ சகோதரர்கள், பாசவலை என பல வெற்றிப்படங்களில் கொடிகட்டிப்பறந்தவர். அந்த பாக்ஸ் ஆபிஸ் ஸ்டார்,

பின்னாளில் மிகப்பெரிய ஸ்டாராக உயர்ந்த எம்கே ராதா, முதன் முதலில் கதாநாயகனாக நடித்த படம்தான் சதிலீலாவதி.1936ல் டைரக்டர் எல்லீஸ் ஆர் டங்கன் இந்த படத்தை ஆரம்பித்தபோது இளைஞனாக, தம்பி ராமச்சந்திரனோடு சக்ரபாணியும் சினிமா வாய்ப்புக்காக துரத்திக்கொண்டிருந்தார்.

ஆனால் அண்ணனுக்கு கிடைக்காத வாய்ப்பு தம்பிக்கு கிடைத்தது. ரங்கய்யா நாயுடு என்ற போலீஸ் அதிகாரி வேடம்தான், ராமச்சந்திரன் என்ற எம்ஜிஆருக்கு திரையுலகில் அறிமுக அவதாரம்.

சதிலீலாவதி எம்ஜிஆருக்கு மட்டுமல்ல, டைரக்டர் எல்லீஸ் ஆர். டங்கன், கதாசிரியராய் ஜெமினி நிறுவன எஸ்எஸ் வாசன், கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன், (இவர் இரண்டாவதாய் புக்கான மேனகா முன்கூட்டியே வந்துவிட்டது) டிஎஸ் பாலையா என ஒரு ஜாம்பவான் கூட்டத்திற்கே முதல் படமாய் அமைந்தது

ஆனால் ஏனோ, சக்ரபாணிக்கு மட்டும் சதிலீலாவதி கிடைக்காமல் போனாள். சதிலீலாவதி ஷீட்டிங் ஸ்பாட்டை அடிக்கடி வலம் வந்து இயக்குநர் டங்கனின் பார்வையில் சக்ரபாணி பட்டுகொண்டே யிருந்தார்.டங்கனுக்கு மட்டும் சக்ரபாணியின் கம்பீரமான குரல் மனசுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. இதன்காரணமாக. தனது அடுத்த படமான ‘இரு சகோரதரர்’களில் வாய்ப்பு தந்தார்.

என்ன பொருத்தம்..? எம்ஜிஆரும் அவரின் அண்ணன் சக்ரபாணியும் இணைந்த முதல் படத்திற்கு டைட்டில், இரு சகோதரர்கள்…கடுமையாக திரைத்துறையில் போராடிய சக்ரபாணிக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படம் மஹாமயா.

அடுத்தவன் மனைவிமேல் ஆசைப்படும் மன்னனுக்கு காம தூபத்தை ஊதிவிடும் மந்திரி வேடம்..
தமிழ்சினிமாவின் வசனம் எழுதுவதில் முதன் முதலாய் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்றவர் இளங்கோவன். இவரின் வசனத்தில் சக்ரபாணி நக்கலாக பேசும் வசனங்கள்தான் தமிழ் சினிமாவின் நக்கல் டிரெண்ட்டின் முன்னோடி.

இதன்பிறகு, சக்ரபாணியும் வந்த வாய்ப்புகளை யெல்லாம் குறைவைக்காமல் செய்து முடிக்க, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, திகம்பர சாமியார் என பெரும்பாலும் வெற்றிப்படங் களில் தான் பங்களிப்பு..இருந்தபோதிலும் தம்பியின் படங்களில் தலைகாட்டும்போதுதான் வெளிச்சம் அதிகமாக கிடைத்தது.

மருத நாட்டு இளவரசி(1950) யில் ஒற்றை ஆளாக சதிமேல் சதித்திட்டங்களை தீட்டி படம் முழுக்க வில்லத்தனத்தைக்காட்டி, கதாநாயகனாக வரும் கொன்றுபோடத்துடிப்பார். படம் முடிய இரண்டு நிமிடம்இருக்கும்வரை எம்ஜிஆரை கதறவிட்டுக் கொண்டே இருப்பார்.

என் தங்கை(1952) படத்திலோ இன்னும் கொடுமையான சித்தப்பா வேடம்.. ஈவிரக்கமே இல்லாமல் வாட்டிவதைக்கும் அவரை எதிர்த்து ஜெயிக்க முடியாமல் கடைசியில் நொந்துபோய், குருட்டுத் தங்கையுடன் எம்ஜிஆர் கடலில் விழுந்து இறந்தேபோவார்.,

அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன் என அவரின் வில்லத்தனத்தை பேசம் படங்கள் நிறையவே உண்டு. நீண்ட பட்டியல் உண்டு. துரோகம் கலந்த வில்லன் வேடத்தில் கலந்துகட்டி அடிப்பது சக்ரபாணிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

அரசனாக வந்தாலும் சரி, வில்லனாக வந்தாலும் சரி, மலைக்கள்ளன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரமானாலும் சரி, இவரின் குரலில் அப்படியொரு, அழுத்தமான உச்சரிப்பால் வித்தியாசமான பாணி சுழன்றடிக்கும்

தம்பிக்கே தந்தையாக, இதயவீணை, நேற்று இன்று நாளை போன்ற படங்களிலும் நடித்தவர். திரைத்துறையில் அவர் அடைய நினைத்த உயரத்தை எட்டாமல் போனது துரதிஷ்டம்.. ஆனால் தன் வளர்ச்சிக்காக சகலத்தையும் ஒதுக்கிவிட்டு தன் நிழலாய், தியாகத்தின் உருவமாய் ஒரு அண்ணனை பெற்றது எம்ஜிஆரின் அதிர்ஷ்டம்.

தம்பியின் விவகாரங்களை பார்த்துக்கொள்வ தற்காகவே தன் திரையுல பயணத்தை சுருக்கிக் கொண்டவர் சக்ரபாணி. தமிழ் திரையுலகில் சின்னவர் என்றால் மக்கள் திலகத்தை மட்டுமே குறிக்கும். காரணம், அண்ணன் எம்ஜி. சக்ரபாணியை எல்லோருமே பெரியவர் என அழைத்ததால்.

இவ்வளவு பின்னணிகொண்ட சக்ரபாணி, ஒரு நாளும் தம்பியின் மனது கோணும்படி நடந்துகொண்டதே யில்லை.அதனால்தான், காலையிலும் மாலையிலும் எங்கே எவ்வளவு பிசியாக இருந்தாலும் அண்ணனை போனில் விசாரித்துவிடுவார் அருமைத்தம்பி.

சாதாரண உடன்பிறப்புகளா அவர்கள்? குடிக்க கஞ்சிகூட கிடைக்காமல் மூன்று நாள் பட்டினியால் வீட்டுக்குள்ளே மயங்கி சாகக்கிடந்து, அக்கம் பக்கத்தினரின் கருணையில் சாப்பாடு போடப்பட்டு காப்பாற்றப்பட்ட ஜீவன்களாயிற்றே.

உடன் பிறந்த ஒரே தம்பி, முன்னணி கதாநாயகனாக, வசூல் சக்ரவர்த்தியாக தமிழ்நாட்டுக்கே முதலமைச்சராக உயர்ந்தபோதும், சக்ரபாணிக்கு அதிகாரத்தொணி வந்ததே கிடையாது.
.
10 பிள்ளைகளை பெற்றாலும் தம்பி ஆட்சியின் செல்வாக்கை குடும்ப ஆதிக்கத்தை வைத்து கூறுபோடாமல், அணைபோட்டு பார்த்துக்கொண்டவர்.


லட்சோப லட்சம் பாமர மக்கள் தங்கள் தெய்வமென கொண்டாடும் ஒரு மாநில முதலமைச்சரின் உடன் பிறப்பு, எங்கு சென்றாலும், முதல் அமைச்சரின் அண்ணன் என்ற பந்தாவே இல்லாமல் செல்வார்.

தம்பியை வைத்து தலைகால் புரியாமல் ஆடாமல் அடக்கமாகவே வாழ்ந்த சக்ரபாணி 1986ல், தம்பி உயிரோடு இருக்கும்போதே இவ்வுலகில் விடைபெற்றுக்கொண்டார்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை..

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.

அவர் இயக்கிய அரச கட்டளை படப்பாடல்தான் இது..

அமரர் எம்ஜி சக்ரபாணியின் 109 வது பிறந்தநாள் இன்று