குதிரை பேரம் நடத்தும் பாஜக : குற்றம் சாட்டும் கூட்டணிக் கட்சி

னாஜி, கோவா

ட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக குதிரைப்பேரம் நடத்துவதாக கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிர கோமாந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

கோவாவில் உள்ள மாநிலக் கட்சிகளில் மகாராஷ்டிர கோமாந்தக் கட்சியும் ஒன்றாகும். இந்தக் கட்சி சுமார் 50 வருடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவுடன் இக்கட்சி கூட்டணி வைத்துள்ளது. அத்துடன் கோவா அமைச்சரவையிலும் பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் கோவா அரசியலில் திருப்பமாக மகாராஷ்டிர கோமாந்தக் கட்சி பாஜகவினர் சிலரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்ற பனாஜி கிளையில் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த மனுவை அந்த கட்சியின் தலைவர் சத்யவான் பாரிக்கர் அளித்துள்ளார்.

அந்த மனுவில், “தற்போது கோவாவின் அரசியல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆளும் பாஜகவில் முதல்வர் உள்ளிட்ட நான்கு பேர் கடுமையாக நொய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களால் சட்டப்பேரவைக்கு வர இயலாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் பதவி விலகி உள்ளது பாஜகவினால் தான் என தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க விரும்பாத பாஜக இவ்வாறு குதிரைப் பேரத்தில் ஈடுபட்டுள்ளது.

எனவே பதவி விலகி பாகஜவில் இணைந்தவர்களை இன்னும் 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிடுவதன் மூலம் பாஜகவின் குதிரைப் பேரத்தை தடுக்க முடியும். பாஜகவின் தேசிய தலைவரின் ஆலோசனைப்படியே சபாநாயகர் இந்த இருவரின் ராஜினாமாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் பாஜக செய்து வரும் குதிரைப் பேரம் குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியே நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.