உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். ஆய்வு இருக்கை: எடப்பாடி அறிவிப்பு

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களாக காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்று சட்டமன்ற கூட்டம் தொடங்கியம் கேள்வி நேரம் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  110-வது விதியின் கீழ்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், அறநிலையத்துறை, விளையாட்டுத்துறை,  தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் வைப்பு நிதியில் எம்.ஜி.ஆர் கலை, சமூக ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசியதாவது, அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும், தூய்மையும் மிக்க மொழியாகவும், வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், வீரம் செறிந்த மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், அதனை உலகமெங்கும் பரப்புவதிலும் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு, தமிழ் மொழியை சிறப்பிப்பதை முன்னெடுத்து செல்லும் விதமாக, இத்துறை குறித்த பின்வரும் அறிவிப்புகளை இப்பேரவையில் அறிவிக்கின்றேன்.

1. பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்திற்குப் பாடுபட்டவர்களின் வாழ்வியலைப் பன்முக நோக்கில் ஆராய்ந்து, வளரும் தலைமுறையினரும் எதிர்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், ஆய்வுகள் நடத்தப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் மற்றும் சமூகத்தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை, கலைத் தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று 1 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்துத் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. இந்தியாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி, தமிழ் வளர்க்கும் அற்புதமான திட்டம் ஜெயலலிதாவால் தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

3. உலக நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தாய்மொழி யையும், கலையையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்கும் நோக்கில், அங்குள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து, அவர்கள் மேற்கொண்டு வரும் தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச் சுற்றுலா, உலகத் தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

4. ஆங்கில மொழி அறிஞர்கள், ஆங்கில மொழிச் சொற்களை தொகுத்தல் முறையில் அணிய மாக்கி, மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு வழங்கி வருகின்றனர்.  அதுபோல், உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் அத்தகைய தொகுப்பு தேவை என்பதை உணர்ந்து, “சொற்குவை” என்ற திட்டம் தொடங்கப்படும்.

இதில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொற்களை பதிவு செய்தல், சொற் களின் தொடராக்கப் பரிமாணங்களைப் பதிவு செய்தல், சொற்களுக்கான பொருள் விளக்கத்தைத் தேடும் வசதியை அமைத்துக் கொடுத்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், வந்த சொல்லே மீளவும் வராமல் தடுத்தல் மற்றும் புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டு, அவை இணையதளப் பொது வெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், மொழியியல் ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும். இதற்கென ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

5. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் (M.A) பயிலும் மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில், இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் தெரிவின் அடிப்படையில் முதலாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள், இரண்டாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக தலா 2,000/- ரூபாய் வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ஆண்டுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற் காக சுமார் 30.75 கோடி செலவில் தங்கும் இடம் அமைக்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள நிதி வசதி இல்லாத ஆயிரம் கோவில்களுக்கு தலா 1 லட்சம் வீதம் சுமார் ரூ.10 கோடி செலவில் புணரமைப்பு மற்றும் திருப்பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  சேலம் மாவட்டத்தில் சுமார் 17.35 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும் கூறி உள்ளார்.