சர்ச்சை: தகுதி இல்லாத “இதயக்கனி” விஜயனுக்கு எம்.ஜி.ஆர். விருது அளிக்கப்பட்டதா?

மிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரம்மாண்டமான விழா நடத்தப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரோடு பெருந்திரளான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில், எம்.ஜி.ஆரோடு பழகியவர்கள் அவருடன் பணியாற்றியவர்களுக்கு விருது அளிக்கப்பட்டது. இதில்தான் இப்போது சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து கூறும் எம்.ஜி.ஆர். பக்தர்கள், “புரட்சித்தலைவர் அவர்களை கவுரவிக்கும் விதமாக அவரது நூற்றாண்டை தமிழக அரசு கொண்டாடி வருவது மகிழ்ச்சிதான். ஆனால் இதில் ஏகப்பட்ட குழறுபடிகள்.

முக்கியமாக, எம்.ஜி.ஆருடன் பழகியவர்கள், பணிபுரிந்தவர்களுக்கு விருது அளித்ததில் மோசடி நடந்திருக்கிறது.

எம்.ஜி.ஆருடன் பழகியவர்கள், பணிபுரிந்தவர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விஜயனுக்கு விருது அளிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

எம்.ஜி.ஆர். நடித்த அன்பேவா படம் பெரு வெற்றி பெற்றது. அப்படத்தைத் தயாரித்த ஏவிஎம். அதிபரின் மகன் சரவணன் இன்றும் நம்முடன் வாழ்கிறார். அவரை அழைத்து கவுரவிக்கவில்லை.

எம்.ஜி.ஆரை வைத்து நிறைய படங்களை தயாரித்த சாண்டோ சின்னப்பதேவர் குடும்பத்தினர்,  எம்.ஜி.ஆருக்காக அழியாப்புகழ்பெற்ற பாடல்களை எழுதிய கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி போன்றோரின் குடும்பத்தினர்,  ஆகியோரை அழைத்து விருது அளிக்கவில்லை. இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் கவிஞர் புலமைப்பித்தனையும் ஒதுக்கிவிட்டார்கள்.

எம்.ஜி.ஆர். – சக்ரபாணி படத்துடன் லீலாவதி

எம்.ஜி.ஆர். உடல்நலமின்றி அமெரிக்கா புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, டாக்டர் பழனி பெரியசாமி ஆலோசனயில்தான் சிகிச்சை நடந்தது. அவரையும் புறக்கணித்துவிட்டார்கள்.

எம்.ஜி.ஆர். அண்ணன் சக்ரபாணி குடும்பத்துக்கே அழைப்பில்லை. அவரது மகள் லீலாவதிதான் எம்.ஜி.ஆருக்கு சிறுநீரக தானம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பணியாற்றிய ஆர்.எம். வீரப்பன், ஹண்டே போன்றவர்களையும் அழைக்கவில்லை. எம்.ஜி.ஆர். உடல் நலிவுற்றபோது அவருக்கான சிகிச்சைக்கு முழு ஏற்பாட்டைச் செய்தவர் ஹண்டேதான்.

எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமி. இவர் எம்.ஜி.ஆர் மீது அளவற்ற அன்பு, பற்று உடையவர்.

எம்.ஜி.ஆருடன் ஹண்டே

கேரளாவில் இருக்கும் எம்.ஜி.ஆர்.வீடு பாழடைந்து கிடந்தது. இதைக் கேள்விப்பட்ட சைதை துரைசாமி, தன் சொந்த செலவில் பல லட்ச ரூபாய் மதிப்பில் அதை புணரமைத்து வருகிறார். அதே போல எம்.ஜி.ஆர். புகழ்பாட தனது சொந்தப்பணம் ஐம்பது கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளார். இவருக்கும் விருது அளிக்கவில்லை!”  என்று எம்.ஜி.ஆர் பக்தர்கள் வருந்துகிறார்கள்.

மேலும், “தகுதியானவர்களை எல்லாம் புறக்கணித்தது  மட்டுமல்ல. தகுதியில்லாதவரை அழைத்து கவுரவித்திருக்கிறார்கள். “இதயக்கனி” இதழை நடத்தும் விஜயன் என்பவருக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆருடன் பழகியவர்கள், பணிபுரிந்தவர்களுக்கு விருது அளிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதயக்கனி என்ற மாத இதழை நடத்தும் விஜயனுக்கு விருது அளித்திருக்கிறார்கள்.

இந்த விஜயன் எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்தவர் அல்ல. அவ்வளவு ஏன்.. எம்.ஜி.ஆரை நேரடியாக இவர் சந்தித்ததில்லை. அவ்வளவு ஏன், இவர் எம்.ஜிஆரை நேரடியாக பார்த்தே  இல்லை.

எம்.ஜி.ஆர். புகழ்பாடுவதாகக் கூறி இதயக்கனி இதழை நடத்தும் விஜயன், அதன் மூலம் உலகம் முழுதும் இருக்கும் எம்.ஜி.ஆர். பக்தர்களை தொடர்புகொண்டு  செழிக்கிறார். அதுவும் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகுதான் இந்த பத்திரிகையையே ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர். – அண்ணா – ஜெயலலிதா ஆகியோருடன் ஆர்.எம். வீரப்பன்

தான் விருது பெற்றது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட விஜயன், “மனிதநேயர் எம்.ஜி.ஆரோடு பணிபுரிந்த திரு. ஆரூர் தாஸ், கவிஞர்கள் திரு. முத்துலிங்கம், திரு. பூவை செங்குட்டுவன், திரு. கே.பி. ராமகிருஷ்ணன் (ஸ்டண்ட்), திரு. முத்து (உடையலங்காரம்) மற்றும் நடிகையர் திருமதிகள் பி.எஸ்.சரோஜா, லதா, சாரதா, ராஜஸ்ரீ, ரத்னா, ஷீலா, குமாரிகள் காஞ்சனா, சச்சு, சி.ஐ.டி. சகுந்தலா, வெ .ஆ. நிர்மலா, நடிகர்கள் திரு. விஜயகுமார், திரு. பாக்யராஜ், பின்னணி பாடகியர் பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி  ஆகியரோடு நினைவுப் பரிசு பெற்றவர்களில் நானும் ஒருவன்” என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது எம்.ஜி.ஆரோடு பணிபுரிந்தவர்களோடு சேர்த்து எம்.ஜி.ஆரையே பார்க்காத தனக்கும் விருது அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை தன்னை அறியாமலேயே இதயக்கனி விஜயன் வெளிப்படுத்திவிட்டார்

இன்னொரு விசயம்.. இந்த விஜயன் எம்.ஜி.ஆர். ரசிகரும் அல்ல. சிவாஜி ரசிகர். சிவாஜி மன்ற பொறுப்பிலும் இருந்தவர்.

இப்படி தனது பிழைப்புக்காக எம்.ஜி.ஆர். ரசிகர் போல் வேடம் போட்டு ஏமாற்றுபவருக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விருது அளித்திருக்கிறார்கள்” என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

விருது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள தமிழ்நாடு மக்கள் தொடர்புத்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கரை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “விருதுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் விருதுகள் அளிக்கப்பட்டன” என்றார்.

“அந்தக் குழுவில் யார் யார் இருந்தார்கள்”  என்று கேட்டோம். சிறிது நேர மவுனத்துக்குப் பிறகு, “திரைப்பட தொழிலாளர் வெல்பர் போர்டு பி.ஆர்.ஓ.சரவணன், திரைப்பட பிரமுகர்களோடு ஆலோசித்து பட்டியல் தயாரித்தார். அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு விருது அளித்தோம்” என்றவர் அத்துடன் தொடர்பைத் துண்டித்தார்.

சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இதயக்கனி இதழின் ஆசிரியர் விஜயனை தொடர்புகொண்டு அவரது தரப்பைக் கேட்டோம்.

அவர், “முதலில் ஒரு விசயத்தைச் சொல்லிவிடுகிறேன்.சைதை துரைசாமி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். முதல்வர் அவரது பெயரைக் குறிப்பிட்டு வரவேற்றார். புலமைப்பித்தன், ஏ.வி.எம் சரவணன் ஆகியோர்  உடல்நலக் குறைவுகாரணமாக வர இயலவில்லை. ஆகவே புறக்கணிப்பு என்பதற்கு இடமில்லை.

இப்போது என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு வருகிறேன். எம்.ஜி.ஆரை நான் பார்த்திருக்கிறேன். பழகியதில்லை அவருடன் பழகியதாக எங்கும் நான் சொன்னதும் கிடையாது.

நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், “எம்.ஜி.ஆருடன் பழகியவர்கள் பணிபுரிந்தவர்களுக்கு விருது” என்று பொதுவாக தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த விருது எம்.ஜி.ஆர். புகழ் பாடுபவர்களுக்கும் சேர்த்துத்தான்.

இதில் இன்னும் ஆழமாக உள்ளே போனால் நிறைய கேள்வி வரும். அதற்குள் போக நான் விரும்பவில்லை.

எம்.ஜி.ஆருடன் சைதை துரைசாமி

என்னைப் பொருத்தவரை, எம்.ஜி.ஆருடன் பழகியவர்கள் செய்யாத பல பணிகளை நான் செய்திருக்கிறேன். அதனால் என்னை அழைத்து கவுரவித்திருக்கலாம்.

நான் கடந்த 19 வருடங்களாக இதயக்கனி இதழை நடத்தி வருகிறேன். இது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இதழ். வேறு நோக்கமே கிடையாது. ஒவ்வொரு இதழின் அட்டையையும்  எம்.ஜி.ஆர்.தான் அலங்கரிப்பார்.

1999ல் இருந்து எம்.ஜி.ஆர். புகழ்பாடும் விழாக்களை உலகம் முழுதும் நடத்தி வருகிறேன். அப்போது அரசு உட்பட யாரும் விழா நடத்தவில்லை.  பிற்காலத்தில் என்னைப் பார்த்து  சிலர் எம்.ஜி.ஆருக்காக விழா எடுக்க ஆரம்பித்தார்கள்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர். பெயரைச்சொல்லவே பலரும் பயந்தார்கள். அப்போதும் நான் அவர் புகழ் பாடிவந்தேன்.

நான் எம்.ஜி.ஆர். புகழ்பாட என்னென்ன செய்திருக்கிறேன் என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

சிவாஜி ரசிகராக இருந்திருக்கிறேன்.. அந்த மன்றத்தில் பொறுப்பு வகித்தேன் என்பதை குற்றச்சாட்டுப்போல சொல்கிறார்கள். இவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

சிவாஜி ரசிகர் மன்றத்தில் நான் பொறுப்பு வகிக்கவில்லை. அதே நேரம் தீவிர சிவாஜி ரசிகர்தான் நான். அதை நானே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறேன். ரசிப்புத்தன்மை என்பது அவரவர் சொந்த விசயம்.

“இதயக்கனி” விஜயன்

எம்.ஜி.ஆரின் பண்பு, குணநலன் ஆகியவற்றைக் கேள்விப்பட்டு, அறிந்து அவரது பக்தன் ஆனேன். அவரது நல்ல பண்புகளுக்காகத்தான் ஈர்க்கப்பட்டேன். அதை நானும் பின்பற்றுகிறேன்.

எம்.ஜி.ஆர். எல்லோரையும் நேசிக்கச் சொன்னார். அதையே நான் பின்பற்றுகிறேன். பிறகு ஏன் சிவாஜியை வெறுக்க வேண்டும்? சிவாஜியை மட்டுமல்ல யாரையும் என்னால் வெறுக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர். பக்தனுக்கு அழகு.

எம்.ஜி.ஆரின் நற்குணங்களை பின்பற்றாதவர்கள், அவரது ரசிகரனாக பக்தனாக தங்களைச் சொல்லிக்கொள்வது வேடிக்கை.

காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி என்றார் எம்.ஜி.ஆர்.  அவரையே விமர்சித்தார்கள். நான் எம்மாத்திரம்?

அடுத்ததாக எம்.ஜி.ஆர். புகழ்பாடி நான் சம்பாதிக்கிறேன் என்கிறார்கள்.  உண்மயில் எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி நான் யாரையும் அழைத்ததே கிடையாது. பத்திரிகைத்துறையில் நான் சம்பாதித்த நற்பெயர் மூலமாகத்தான் பலரும் எனக்காக வருகிறாரகள்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். மலேசியாவில் 2011ல் எம்.ஜி.ஆர். சிலை திறப்புவிழாவை ஏற்பாடு செய்தேன். அதில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசும்போது, “இந்த விழாவில் நான் கலந்துகொள்ள முதல் காரணம் எம்.ஜி.ஆர். அடுத்த காரணம் இதயக்கனி விஜயன்” என்றார்.

என் நட்பை பயன்படுத்தி எம்.ஜி.ஆர். புகழ்பாடுகிறேன். அவரது பெயரைச் சொல்லி நான் தனிப்பட்ட முறையில் எந்த பயனும் அடையவில்லை.

கடைசியாக ஒன்று.. எம்.ஜி.ஆர். புகழ்பாட இந்த ஜென்மம் போதாது. அடுத்த ஜென்மங்கள் கிடைத்தாலும் அவரது புகழை தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன். மற்றபடி எந்தவொரு விருதுக்கும் ஆசைப்படுபவன் அல்ல” என்று சொல்லி முடித்தார் இதயக்கனி விஜயன்.