சென்னை

சென்னை காமராஜர் சாலையில் ஆடம்பரம் இல்லாமல் எம் ஜி ஆர் நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது.

இன்று மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் இன் பிறந்த நாள் ஆகும். சென்னையில் மெரினா கடற்கரையில் தமிழக அரசு ரூ.2.52 கோடி செலவில் எம் ஜி ஆர் நூற்றாண்டு வளைவு ஒன்றை அமைத்துள்ளது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து இன்று தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழகக்றிஞர் தினேஷ் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

அந்த பொது நல மனுவில் ஏற்கனவே அச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடஞ்சலாக இருந்ததால் அகற்றப்பட்டதை சுட்டிக் காட்டி இந்த வளைவும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என குறிப்பிடபட்டிருந்தது. அது மட்டுமின்றி அதிமுகவின் உட்கட்சி பூசலால் அரசியல் லாபத்துக்காக இந்த வளைவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வளைவை திறக்க நீதிபதிகள் முதலில் தடை விதித்தனர். அதன் பிறகு இந்த வளைவை திறக்க அனுமதி அளித்தனர். ஆயினும் திறப்பு விழா எவ்வித ஆடம்பரமும் இன்றி ஐந்து நிமிட விழாவாக மட்டும் நடக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதை ஒட்டி இன்று ஆடம்பரமின்றி அமைதியாக எம் ஜி அர் வளைவு திறக்கப்பட்டது.