எம்ஜிஆர்… அவர்தான். அவர் மட்டுந்தான்….! பகுதி-2

சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

ரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய நாடோடி மன்னன் படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..

‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..

நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் என்ற மூவரையும் தாண்டி, நாடோடி மன்னனில் படு கில்லாடி எம்ஜிஆர் ஒருவர் வெளியே தெரியாமல் இருந்தார். இந்த கில்லாடி எம்ஜிஆர், அரசியல் தலைவர் எம்ஜிஆருக்குள்ளும் விஸ்வரூபம் எடுத்தததால்தான் அவரை அரசியலில் திமுக தலைவர் கலைஞராலேயே கடைசிவரை சமாளிக்க முடியவில்லை..

எதற்காக இவ்வளவு பேசவேண்டியுள்ளது என்றால், நாடோடி மன்னன் படத்தில்தான் எம்ஜிஆருக்கு எதிர்கால திட்டமிடல் என்கிற யோசனை தோன்றியிருக்கவேண்டும். சினிமாவில் மற்றவர்களின் ஆளுமைகளோடு தன் ஆளுமை சமமாகவோ, கீழாகவோ போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்..

ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற படங்கள் கலைஞரின் வசனத்தால் காவியமாகின.. அது மறுக்கமுடியாத உண்மையும்கூட. சிவாஜியின் பராசக்தி, மனோகரா போன்ற படங்களைக்கூட கலைஞர் அவருடைய வசனங்களால், கலைஞரின் பராசக்தி, கலைஞரின் மனோகரா என்றே திரைஉலகில் பேசவைத்தார் இரு பெரும் நடிகர் திலகங்களுக்கு ஆரம்பகாலத்தில் வசனங்களால் வெற்றி சிம்மாசனம் அமைத்து தந்ததில் கலைஞருக்கு பெரும் பங்குண்டு.

1953லேயே கலைஞரை வைத்து சொந்தப்படம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினார் எம்ஜிஆர், கதை வசனத்திற்கு கலைஞர் தயாராக நின்றார். ஆனால் படத்தயாரிப்பு கைகூட வில்லை. பிறகு மலைக்கள்ளன், மனோகரா போன்ற வற்றின் வெற்றிகளால் கலைஞரின் மார்கெட் தாறுமாறாய் எகிறிப்போனது..

அதேவேளையில் மலைக்கள்ளன், குலேபகாவலி, தாய்க்குப்பின்தாரம் மதுரைவீரன், அலிபாபாவும் 40 திருடர்க ளும் போன்ற தொடர் வெற்றிகளால் எம்ஜிஆர் வசூல் சக்ரவர்த்தியாக மாறி, திமுகவில் முக்கியஸ்தராகவும் உருவெடுத்துவிட்டார்.

இங்குதான் நின்று விளையாடுகிறது கில்லாடி எம்ஜிஆரின் சாமர்த்தியம். இரண்டாம் முறையாக சொந்தப்படம் நினைப்புவந்தபோது எம்ஜிஆரின் காய் நகர்த்தல்கள் முற்றிலும் விநோதமாக இருந்தன. வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..

படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..

கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர். அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.

இன்னொரு வியப்பான விஷயம். படத்தில் கண்ணதாசன் பாட்டெழுதவில்லை. வேறு எட்டு பேர் எழுதினார்கள். எல்லாம் ஹிட் பாடல்கள். ஆனாலும் ஒற்றை ஆளாய் பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மட்டுமே பேசப்பட்டார்..

நாடோடி வீராங்கன், மன்னன் மார்த்தாண்டன், ராஜகுரு தளபதி பிங்களன், அரசியல் ஆலோசகர் கார்மேகம் அமைச்சர்கள், புரட்சிகூட்டத்தினர் என் நிறைய பாத்திரங்கள் உண்டு. ஆனால் இவை எதையும் திராவிட இயக்க நடிகர்களான எஸ்எஸ்ஆர், கேஆர் ராமசாமி எம்ஆர் ராதா, சகஸ்ஹர நமம் போன்றவர்களுக்குக்கூட கொடுக்கவில்லை. ..

நாடோடிமன்னன் படம் என்றாலே எங்கும் எம்ஜிஆர் எதிலும் எம்ஜிஆர் என்ற பெயர் மட்டுமே பேசும்படி பார்த்துக்கொண்டார்.. அதுதான் வெளியில் தெரியாத கில்லாடி எம்ஜிஆர்.

திமுகவின் கொள்கைகளை எம்ஜிஆர் தன் படத்தில் தனி ஆளாய் திறம்பட பேசியிருக்கிறார் என்று அறிஞர் அண்ணாவே நினைக்கும் அளவுக்கு கட்டமைத்தார் எம்ஜிஆர்.

நாடோடி மன்னன் தயாரான போது பல படங்களுக்கு ஒப்பந்தமாகி அவ்வப்போது அவற்றிலும் நடித்துக்கொண்டிருந்தார். படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான் அவர் வாழ்வில் துரதிஷ்டம் விளையாட ஆரம்பித்தது. சீர்காழியில் நடந்த நாடகத்தில் விபத்து ஏற்பட்டு கால் முறிவு ஏற்பட்டது எம்ஜிஆருக்கு. அவர் இனி எழுந்த நடக்கவே முடியாது என்ற பலரும் சொன்னார்கள்.

எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த பல படங்கள் கால்வாசி, அரைவாசியாக நின்றன, அவற்றின் கதையும் அம்பேல் என்றனர். மொத்தத்தில் எம்ஜிஆர் என்று சகாப்தம் குறுகிய காலத்தில் முடிநதுபோனது என்பதே பலரின் தீர்மானமாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து நாடோடி மன்னனுக்கு அடுத்து அறிஞர் அண்ணாவின் கைவண்ணத்தில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படம் படுதோல்வியை சந்தித்தது.

திரை உலகினர் மட்டுமல்ல திராவிட இயக்க தலைவர்களும் அதிர்ந்து போயினர்.. ஆனால் நாடோடி மன்னன் என்ற படத்தை கொடுத்த டெக்னீஷியன் எம்ஜிஆர் அதிர்ச்சி அடையவும் இல்ல, அசரவும் இல்லை.

உடல் தேறியதும் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்த அரச கதை படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.. ராஜாதேசிங்கு விக்ரமாதித்தன் அரசிளங்குமரி, ராணி சம்யுக்தா பாக்தாத் திருடன் போன்ற படங்கள் தான் அவை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கிய இவை வெளிவந்தபோது பெரிய அளவில் எம்ஜிஆருக்கு வெற்றியை தேடித் தரவில்லை. ஒரு டெக்னீசியன் ஆகவும் டைரக்டசனும் தெரிந்த அவர், காட்சியமைப்புகளில் தெரிவித்த யோசனைகளை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஏற்றுக் கொள்ளாததும் இதற்கு ஒரு காரணம். மாஸ் ஹிட்டை கொடுத்த மதுரை வீரன் தயாரிப்பு நிறுவனமான கிருஷ்ணா பிக்சர்சின் ராஜா தேசிங்கு படம், வீம்புக்காக போய் இப்படித்தான் தோல்வியை தழுவியது.

இப்படிப்பட்ட சூழலில் அரச கதைகளில் இருந்து விடுபட்டு சமூகப் படங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டி னார்.. மன்னனாகவும் தளபதியாகவும் வாளை சுழற்றிய எம்ஜிஆர் மார்டனாக பேண்ட் ஷர்ட் கிராப் தலை என தோற்றத்தையே அடியோடு மாற்றி கொண்டார்.

1961 இல் வெளியான திருடாதே என்கிற சமூகப் படம் இப்படித்தான் எம்ஜிஆருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.. திருடாதே பாப்பா திருடாதா என்ற காலத்தால் அழிக்க முடியாத பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை சுமந்திருந்தது படம் அது.

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா போன்ற பாடல்கள் மூலம் எம்ஜிஆருக்கு கொள்கை பாடல்களால் சிம்மாசனம் ஏற்படுத்தித் தந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இளவயதிலேயே அகால மரண மடைந்து விட்டது எம்ஜிஆரை பொறுத்தவரை பெரிய இழப்பு.

பின்னாளில் முதலமைச்சரானபோது எம்ஜிஆர் சொன்னார் நான் அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரித்திற்கு சொந்தமானது என்று..

1960களின் தொடக்கத்தில் எம்ஜிஆரின் திரைஉலகப் பயணம் புதிய பரிமாணத்தில் பறக்க ஆரம்பித்தது. தாய்க்குப்பின் தாரம் படத்தோடு கோபித்துக்கொண்டு போன உயிர் நண்பனும் திரைப்பட தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவர் மீண்டும் திரையில் கூட்டணிக்கு கைகோர்த்தார்.

தாய் சொல்லை தட்டாதே என்ற படம் மிகக் குறைந்த காலத்தில் உருவாகி வெளிவந்து சக்கை போடு போட்டது.
பேண்ட் ஷர்ட் கூலிங் கிளாஸ் தொப்பி என படு ஸ்டைலாக சிஐடி ஆபீஸராக வந்த எம்ஜிஆர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

எம்ஜிஆரை வைத்து பூஜை போட்ட அன்றே படத்தை தேதியை வெளியிட்ட தேவர் சொன்னபடி அதே தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்தார். இது அப்போதைக்கு மிகப்பெரிய அதிசயம்.

மிகப் பெரிய கம்பெனிகளில் நடிப்பதையும் பிரமாண்ட தயாரிப்புகளையும் எம்ஜிஆர் தவிர்த்தார். சின்னப்பா தேவர் போன்ற சாமானிய தயாரிப்பாளர்களை ஊக்குவித்தார்

பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் பாகப்பிரிவினை பாவமன்னிப்பு, பாசமலர் பாலும்பழமும், பார் மகளே பார் என ‘’பா’’ வரிசையில் ஹிட் கொடுத்ததுபோல எம்ஜிஆர் தேவரோடு இணைந்த ‘த’’ வரிசையை ஆரம்பித்தார். தாய்ச்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், என்று ஹிட்டடித்தார். .எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து விநியோகஸ்தர்கள் மத்தியில் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்ற அர்த்தத்தில் பேசப்பட்டது.

இன்னொரு பக்கம் திமுகவில் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்தார் எம்ஜிஆர். 1962ல் நடிகர் எஸ் எஸ்ஆருக்கு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கிய அண்ணா, எம்ஜிஆரிடம் வேறுவிதமாக வேண்டுகோள் வைத்தார். ஒரு தொகுதிகுள் முடங்காமல் மாநிலம் முழுவதும் உன் பிரச்சாரம் மிகவும் அவசியம் என்றார். தலைவன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செய்தார் எம்ஜிஆர். பல்லாண்டுகாலம் நோய்வாய் பட்டு படுக்கையிலேயே கிடந்த அவரது இரண்டாவது மனைவி சதானந்தவதி உடல் நிலைமோசமாகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கட்டம்.

அந்த நிலையிலும் திமுக வேட்பாளர்களுக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார் எம்ஜிஆர். பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது துண்டு சீட்டுடன் வந்தால், மனைவி தொடர்பாக எதிர்மறை தகவலாக இருக்கக்கூடாதே என்று எம்ஜிஆர் மனதில் அடிக்கடி பதற்றம் தொற்றிக்கொள்ளும் கொடுமையான சூழல்.

பெரிய பஸ் முதலாளியை எதிர்த்து நிற்பதால் காஞ்சிபுரம் தொகுதியில் உங்களுக்கு சிக்கலாமே, நானும் வந்து ஒரு நாள் முழுக்க பிரச்சாரம் செய்து உதவட்டுமா என்று எம்ஜிஆர் கேட்டதற்கு அண்ணா சொன்ன பதில், அதெல்லாம் தேவையில்லை. மற்ற தொகுதிகளில் கவனம் செலுத்துங்கள் என்பதுதான்.

1957 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் 15 பேர் வெற்றிபெற்றார்கள் என்ற கட்டத்தைதாண்டி. 1962 தேர்தலில் அது 50 ஆக உயர்ந்தது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால். மறுபடியும் போட்டியிட்டிருந்த 15 பேரில் கலைஞர் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றார், அண்ணா உட்பட 14 பேரும் தோற்றுப்போனார்கள். இந்தியாவிலேயே சட்டமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார் தேனியில் வெற்றிபெற்ற இலட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் எனப்படும் எஸ்எஸ் ராஜேந்திரன்.

தேர்தலில் தோற்ற அண்ணா, நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பியாகி டெல்லிக்குப்போனார். எம்ஜிஆர் சட்டமேலவைக்கு அதாவது எம்எல்சி ஆக்கப்பட்டு அங்கே கால் பதிக்க வைக்கப்பட்டார்.

ஒரே நேரத்தில் சினிமாவிலும் அரசியலிலும் இவ்வளவு களேபரங்களையும் பரபரப்புகளையும் சந்தித்துக் கொண்டிந்தார் எம்ஜிஆர்., இவற்றில் அவரின் இரண்டாவது மனைவியின் மரணமும் அடங்கும்.

ஏற்கனவே வறுமையோடு போராடியபோது முதல் மனைவி தங்கமணியை சரியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை எம்ஜிஆரால். இருமுறை கருத்தரித்தும் எம்ஜிஆரின் வாரிசு தங்கமணியின் வயிற்றிலேயே சிதைத்துபோனது. அவரும் 1942ல் காலமாகிப்போய் எம்ஜிஆரை தவிக்கவிட்டார். 1962ல் சதானந்தவதியும் போய்விட, வாழ்க்கை துணையாக விஎன் ஜானகியை சட்டபூர்வமாய் மனைவியாக்கிக்கொண்டார் எம்ஜிஆர். இதனை முன்னின்று மணமக்களாக்கி நடத்திவைத்தவர் சின்னப்பா தேவர் அவர்கள்.

தேவரைப் போலவே ஆர் ஆர் பிக்சர்ஸ் உரிமையாளரும் இயக்குநருமான டி ஆர் ராமண்ணா, எம்ஜிஆரின் மனம் கவர்ந்த ஒருவர்..

1963-இல் டி ஆர் ராமண்ணா தயாரித்து இயக்கிய பெரிய இடத்துப் பெண் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. பணக்கார பெண்ணின் திமிரை வேறுவேடத்தில் வந்து கதாநாயகன் அடக்கும் பக்கா கமர்சியல் மசாலா கதை.. பட்டிக்காடா பட்டணமா சகலகலாவல்லவன் போன்ற படங்களுக்கெல்லாம் இதுதான் ட்ரெண்ட் செட்டர்..

1963-ல்தான் எம்ஜிஆருடன் நாகேஷ் காமடியான இணைந்து நடித்த பணத்தோட்டம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அது முதல் நாகேஷை தன் படங்களில் தவறாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்ஜிஆர்..

ஏற்கனவே நம்பியார் அசோகன் எம் ஆர் ராதா ஆகிய மூவர் எம்ஜிஆரின் படங்களில் முக்கிய பாத்திரங்களில் வலம் வந்தனர்..

பத்மினி பானுமதிக்கு பிறகு ஆஸ்தான கதாநாயகியாக சரோஜாதேவி வலம்வந்தார். இடையே மகாதேவிக்கு பிறகு நடிகர் திலகம் சாவித்திரி இரண்டு படங்களிலும் தேவிகா ஒரே ஒரு படத்திலும் ஜோடி போட்டுவிட்டு போய் விட்டார்கள்.

தொட்டதெல்லாம் துலங்கி ஏறுமுகத்தில் இருந்தார் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட சிவாஜியின் பிரமாண்ட படமான கர்ணனை, பொருட்செலவே இல்லாத வேட்டைக்காரன் என்ற கறுப்பு வெள்ளை படத்தை முன்னிறுத்தி வெற்றி காணும் அளவுக்கு இருந்தார் எம்ஜிஆர்.

இதே காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு இன்னொரு பலம் கிடைத்தது, அவர்தான் காவியக்கவிஞர் வாலி. கண்ண தாசன் கொடிகட்டிப்பறந்தாலும் அடிக்கடி உரசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த தருணம் அது. தனக்கென ஒரு கவிஞன், தன் மன ஓட்டத்தை நன்றாக பரிந்துகொள்ளும் கவிஞன், தன்னை மக்களின் தலைவனாக பாட்டில் வடிவமைத்துத் தரும் கவிஞனை தேடிக்கொண்டிருந்தபோதுதான் வாலி கிடைத்தார், எம்ஜிஆர் கையில்.

தெய்வத்தாய் படத்தில்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என்று எம்ஜிஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிற மாதிரி பாட்டுசட்டை தயாரித்தார் வாலி..

எம்ஜிஆரின் முதல் ஈஸ்மென் கலர் படமான படகோட்டியில் அனைத்து பாடல்களையும் எழுதினார் அதே வாலி..

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்?
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்…

தத்துவத்தையும் கொள்கையையும் ஒருசேரக் கலந்து பிழிந்துகொடுத்த வாலி, தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்.. என்று இலக்கிய நயத்தோடு காதல் ரசத்தையும் படகோட்டி என்ற ஒரே படத்தில் கொட்டி வியப்பின் உச்சிக்கே கொண்டுபோனார் வாலி.

அவரின் பிரமாண்ட அடுத்த கொள்கை அஸ்திரப்பாடல், நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் என்று சாட்டையை சுழட்டியபடி எம்ஜஆர் பாடும் எங்கவீட்டுப்பிள்ளை படப் பாடல்.

தனது பெரிய கட கம்பெனி தவிர்ப்பு கொள்கையை தளர்த்திக்கொண்டு நாகிரெட்டியின் விஜயா வாகினி நிறுவனத் திற்காக எம்ஜிஆர் நடித்துக்கொடுத்த படம்தான் எங்க வீட்டு பிள்ளை. நாடோடி மன்னனுக்கு பிறகு எம்ஜிஆருக்கு பிளாக் பிளாக் பஸ்டர் படம் என்றால் அது எங்கவீட்டு பிள்ளைதான். அனைத்து அம்சங்களையும் கொண்ட பொழுதுபோக்கு படமென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி பாராட்டாதவர்களே கிடையாது. எல்லாவற்றையும்விட தமிழ் திரையுலகம் அப்படியொரு வசூலை அதற்குமுன் கண்டதே கிடையாது. பாதாள பைரவி, மாயாபஜார் போன்ற பிரமாண்டங்களையெல்லாம் கொடுத்த ஆனானப்பட்ட நாகிரெட்டியே எங்க வீட்டு பிள்ளை கொட்டிய பணத்தில் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

விஜயா வாகினியின் எங்க வீட்டுப்பிள்ளை, ஏவிஎம்மின் அன்பே வா, ஜெமினி நிறுவனத்தின் ஒளிவிளக்கு.. மூன்று பெரிய நிறுவனங்களின் முதல் கலர் படத்திலும் எம்ஜிஆர்தான் கதாநாயகன்..

1965ல் எங்க வீட்டுப்பிள்ளையை தொடர்ந்து ஜெயலலிதா முதன் முறையாக வந்து சேர்ந்த ஆயிரத்தில் ஒருவன். இன்னொரு பிளாக் பஸ்டர் கம் எவர் கிரீன் காவியம். மறு ஆண்டில் அன்பே வா..திரையிட்ட இடங்களிலெல்லாம் இப்போதைய பாஷையில் சொன்னால், தாறுமாறு தக்காளி சோறு..அவ்வளவுதான்.ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா போன்ற படங்களையெல்லாம் சொல்லித்தான் தெரியவேண்டுமா?

1966 இப்படி முடிந்த நிலையில்தான் 1967 ஆண்டு ஜனவரி மாதம் நடிகவேள் எம்ஆர் ராதாவால் சுடப்பட்டார் எம்ஜிஆர். குண்டுகள் பாய்ந்து மரணத்தோடு போராட்டம், அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி. ரசிகர்கள் கதறல்.. தமிழ்நாடே ஸ்தம்பித்துபோனது.

அடுத்த பகுதியில் நிறைவு பெறும்