Random image

எம்ஜிஆர்… அவர்தான்….. அவர் மட்டுந்தான்….! ஏழுமலை வெங்கடேசன்

எம்ஜிஆர்… அவர்தான். அவர் மட்டுந்தான்….! பகுதி-1

சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

MGR
தந்தையில்லா குழந்தை, ஆறுவயது மட்டுமே மூத்த அண்ணன், வறுமையுடன் போராடிய தாய். இப்படித்தான் ஆரம்பித்தது, கோடானுகோடி மக்கள் இன்றைக்கும் பூஜை அறையில் வைத்து வணங்கும், எம்ஜிஆரின் வாழ்க்கை.

கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைகளுக்கு அமைவதுபோல், சீரான வாழ்க்கை அவருக்கு அமைய வில்லை. அடிமேல் அடிவிழுந்து, அதன்பிறகு ஏற்றம் மேல் ஏற்றம் கண்ட வித்தியாசமான வாழ்க்கைதான் அவருடையது.

பள்ளிப்படிப்பைக்கூட தொடரவிடாத கொலைபட்டினி வாழ்க்கை, துரத்திதுரத்தி கொண்டுபோய் நாடகக்கொட்டகையில் நிறுத்தியது.  சிறுவனாக இருந்தபோது அவரிடம் அளவுக்கு அதிகமாக தென்பட்ட விஷயங்கள், தொழிலில் அர்ப்பணிப்பும் அதையும் தாண்டிய ஆர்வமும். அதனால்  ‘தான் நாடகத்தில் வேஷங்களை தாண்டி, வாள்வீச்சு, சிலம்பம், குஸ்தியாட்டம் என கற்க ஆரம்பித்தார், அப்போது சகலகலா வல்லவர்களாய் திகழ்ந்த காளி என். ரத்னம், கேபி கேசவன் ஆகிய இரு நடிகர்களை குருவாகக்கொண்டு கற்றுத்தேறினார்.

இங்கே கேபி கேசவனை பற்றி சொல்லியாகவேண்டும். 1936ல் எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த சதிலீலாவதி படத்தில் ரங்கய்யா நாயுடு என்ற இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் அறிமுகமான எம்ஜிஆருக்கு இரண்டாவது படம் இரு சகோதரர்கள், இதில் கதாநாயகனாக நடித்தவர்தான் கேபி கேசவன்.

அந்த நடிகருடன் சினிமா பார்க்க ஒரு தியேட்டருக்கு எம்ஜிஆர் பார்க்கச்செல்கிறார். ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு, கேவசனை மொய்க்கிறார்கள். உடன் இருக்கும் எம்ஜிஆரை கண்டுகொள்ள ஆளேயில்லை. பின்னாளில் கதாநாயகனாகி கேசவனோடு சினிமா செல்கிறார். இப்போது எம்ஜிஆரை கூட்டம் மொய்க்கிறது கேசவனை அடையாளம் தெரியாததால் அவரை யாரு கண்டுகொள்ளவில்லை.

இந்த இடத்தில் எம்ஜிஆருக்கு வந்தது, ‘’ஆஹா நாம் சாதித்துவிட்டோம்’’ என்ற கர்வம் அல்ல. இந்த நட்சத்திர புகழெல்லாம் கொஞ்ச நாளிலேயே மங்கிவிடும் என்ற கசப்பான உண்மைதான் அவருக்கு உரைத்தது.

புகழ் நிலைத்து நிற்கவேண்டுமென்றால் தனித்துவம் வேண்டும் என்ற சூட்சுமத்தை புரிந்து கொண்டார். கிடைத்தது சிறிய பாத்திரங்கள் என்றாலும் அத்தனை படங்களிலும் யார் இவர் என்று கேட்கும் அளவுக்கு தனியாகவே தெரிந்தார்.

1939-ஆண்டு வெளிவந்த பிரகலதா படத்தில் இந்திரனாக வரும் எம்ஜிஆர் பெண்ணை கடத்த வேண்டிய சீன், கணவன் இல்லாத நேரம் பார்த்து வந்த கிராதகனே என்று பெண் சொல்வார். பதிலுக்கு எம்ஜிஆர் ஆரம்பிப்பார்..’’ கணவன் இருக்கும்போது நான் வந்தால் அவனை கொன்று விட்டு அதன் பிறகு உன்னை கொண்டு போகவேண்டும். அப்படி செய்தால், உன் மனசு என்ன பாடுபடும்? அதனால்தான் அவனில்லாத நேரத்தில் வந்தேன்’’ என்று நக்கலாக சொல்வார். பிரகலாதா படம் என்பது டிஆர் மகாலிங்கமே சிறுவனாக வந்து சதா பாடிக்கொண்டே இருக்கும் படம்.

தமிழ்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் கோஷ்டியான எம்கே தியாகராஜ பாகவதர் பி.யூசின் னப்பாவுடன் நடித்தது மட்டுமல்லாது எம்எஸ் சுப்புலட்சுமிக்கு காற்றினிலே வரும் கீதம் பாடல் மூலம் பெரும் புகழ் தேடித்தந்த மீரா (1945) படத்திலும் எம்ஜிஆர் நடித்தார். காரணம் எம்ஜிஆரை அறிமுகப்படுத்தி தொடர்ந்த வாய்ப்பு கொடுத்துவந்த டைரக்டர் எல்லீஸ் ஆர், டங்கன்தான் மீராவையும் இயக்கினார்.

இந்த காலகட்டத்தில் சபாபதி படத்தில் நடித்து புகழின் உச்சியில் இருந்த டி.ஆர், ராமச்சந்திரனால், தன் பெயர் கரைந்துபோகுமோ என்ற எண்ணத்தில் எம்ஜி ராம்சந்தர் என்ற டைட்டிலில் வருமாறு எம்ஜிஆர் பார்த்துக்கொண்டார். மனுஷனுக்கு எப்படியெல்லாம் சோதனை வந்திருக்கு பாருங்க..

பதினோரு ஆண்டுகளில் பதினான்கு படங்களில் தலைகாட்டிய பிறகே 1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக முடிந்தது. அதுகூட பெரும் இழுபறிக்கு பிறகே வாய்ப்புகிடைத்து வெற்றிகரமாகவும் அமைந்தது.. படத்தயாரிப் பாளர் ஜுபிடர் சோமு, எம்ஜிஆர்தான் கதாநாயகன் என்று சொல்ல, டைரக்டர் எஸ்ஏ சாமியே அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி, எம்ஜிஆர் அடிவயிறு கலங்கிப்போய்விட்டது. சோமு உறுதியாக இருந்ததால்தான் வயிறு சரியானது. ஏனென்றால் 1940லேயே சாயா என்ற படத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்து பாதிப்படம் தயாரான நிலையில் பங்கு தாரர்களுக்கு இடையே தகராறு வந்து படத்தையே சுருட்டி டப்பாவுக்குள் போட்டுவிட நொந்துபோய்விட்டார்.

அந்த பீதியில் இருந்த எம்ஜிஆருக்கு, முதலில் ஊசலாட்டம் காட்டிய ராஜகுமாரி படம், தள்ளாட்டம் காணாமல் வெளியானது. கலைஞரின் வசனமும் கைகொடுத்து உதவ ராஜகுமாரி சக்சஸ்.. ஆனால். .ஏற்கனவே சில படங்களில் ஒப்புக்கொண்ட செகண்ட்ரோல்களை முடிக்க வேண்டி யிருந்தால் பைத்தியக்காரன், மோகினி, ராஜமுக்தி போன்ற படங்களில் நடித்தார்.

1950ல் மருதநாட்டு இளவரசி படத்தில் புகுந்தபிறகு, பின்ன டைவே இல்லை. 1978ல் கடைசிபடமான மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் வெளியாகும்வரை ஹீரோ என்ற அந்தஸ்த்தை விட்டு எம்ஜிஆர் திரைப்பயணம் இறங்கியதே கிடையாது.
மருதநாட்டு இளவரசியில் கலைஞரின் அனல்பறிக்கும் வசனத்தை எம்ஜிஆர் தன் கம்பீரக்குரலால் பேசிய விதம், அடுத்த படமான மந்திரி குமாரியிலும் அதகளப்படுத்தியது.
எம்ஜிஆர் இந்த நாட்டை ஆள்வார் என்று முதன் முதலில் சொன்ன தீர்க்கதரிசி கலைஞர்தான். மந்திரிகுமாரி படத்தில் தளபதி வீரமோகனாக வரும் எம்ஜிஆரை பார்த்து ராஜகுரு பாத்திரம் எகத்தாளமாக சொல்லும் வசனம்,இது. ‘’உண்டு உண்டு இந்த நாட்டை ஆளும் உரிமைகூட உனக்கு உண்டு’’ 1950ல் கலைஞர் எழுதிய வசனத்திற்கு 1977ல் உயிர் கிடைத்தது.

மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி என 1950-ல் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த எம்ஜிஆர், அதன் பிறகு தனித்துவம் என்ற வித்தையை காட்ட ஆரம்பித்தார் 1951-ல் வந்த மர்மயோகி, தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஏ சர்ட்டிபிகேட் பெற்ற படம். கவர்ச்சிக்காக அல்ல, திகில் காட்சிகளுக்காக,  தமிழ் சினிமாவில் முதன் முதலாய் பன்ச் டயலாக் பேசியவரும் எம்ஜிஆர்தான்.. மர்மயோகி படத்தில் கரிகாலன் என்ற பாத்திரத்தில் வந்து,’’ குறிவைத்தால் தவறமாட்டேன். தவறுமேயானல் குறிவைக்கமாட்டேன் என்று பேசி தியேட்டரையே அதிரவிடுவார்.

அதிலும் அரசாங்கத்தால் தேடப்படும் கொள்ளையனாக இருந்து நாடளும்அரசிக்கு தன் துணிச்சலைகாட்ட அரண் மனை தர்பாருக்கே கயிற்றில் தொங்கியபடியே ஸ்டாலாக வந்திறங்குவார். அதைவிட ஸ்டைலோ, ஸ்டைலாக அடுத்த சீன். சபையில் அமர்ந்து பேச அரசி இடம் தராததால், நாற் காலியை அரசியை பார்த்தடிபயே எட்டி உதைப்பார், நாற்காலி போய்க்கொண்டே இருக்கும் எம்ஜிஆரும் பின்தொடர்ந்தபடியே சொல்வார். நிற்கும் சரியான இடத்தில் நிற்கும். அப்போது அதில் அவ்வளவு தெனாவட்டாக அமருவார்.

சர்வாதிகாரி, என் தங்கை, அந்தமான்கைதி என பல படங்கள் அடுத்தடுத்து எம்ஜிஆர் நடித்து தள்ளினார். என் தங்கை படம் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசத்தை அவ்வளவு உருக்கமாக பேசிய படம். வறுமையான சூழலிலுமபார்வை இழந்த தங்கையை வாழவைக்க எவ்வளோ முயன்றும் உறவுக்கார சாடீஸ்ட்களிடமே தோற்றுப்போவார்.. கடைசியில் தங்கையை தூக்கிக்கொண்டு கடலில் இறங்கி வாழ்க்கையை முடித்துக்கொள்வார். எம்ஜிஆர் படமும் தியேட்டர்களில் ரசிகர்களையும் பெண்களையும் அழவைத்ததுண்டா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வதற்காகவே என் தங்கை படம் அமைந்துபோனது..

என் தங்கை வெளியான அதே 1952ல் பராசக்தியில் அறிமுகம் ஆனார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தியின் மிகப்பெரிய வெற்றியால் அடுத்தடுத்து படங்கள் கிடைத்து இரண்டே வருடத்தில் எம்ஜிஆருக்கு சகபோட்டியாளராக மாறினார் சிவாஜி இன்னொரு பக்கம் படத்தயாரிப் பில் மெதுவாக ஆர்வம் காட்டினார் எம்ஜிஆர் ஜுபிடர் பிக்சர்சும் மேகலா பிக்சர்ஸ்சும் சேர்ந்து நாம் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்தது. இதில் மேகலா பிக்சர்ஸ்லில் கலைஞர் விஎன் ஜானகி, பிஎஸ் வீரப்பா, எம்ஜிஆர், டைரக்டர் காசிலிங்கம் ஆகியோர் பங்குதாரர்கள்.

நாம் படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரவில்லை ஆனால் எம்ஜிஆரின் நடிப்பை பேச வைத்தது.  தன்னை உயிரோடு எரிக்க முயலும் சம்பவத்தில் தப்பும் குமரன் என்ற ஹீரோ, வெந்துபோன முகத்துடன் இரவில் மட்டுமே உலாவும். இப்போதைய ஷங்கரின் ஐ படங்களுக்கெல் லாம் எம்ஜிஆர் கோர முகத்தோடு மிரட்டும் மேக்கப்பில் துவம்சம் செய்த ‘நாம்’ படம்தான் தாத்தா படம்.

தமிழ்சினிமா வரலாற்றில் அபரிதமான வளர்ச்சிக்கு மிகமிக பெரிய திருப்புமுனை ஆண்டு என்று சொன்னால் அது 1954 ஆம் ஆண்டை சொல்லலாம். காரணம் அந்த ஆண்டு பல படங்கள் பலரும் மைல்கல்லாக அமைந்தது. எம்ஆர் ராதாவுக்கு பெரும்புகழைதேடித்த ரத்தக்கண்ணீர் வந்தது. எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியு வந்ததும். டிஎம்சுக்கு தமிழ்சினிமாவில் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் நிரந்தர பின்னணி குரலாக மாறிப்போன டிஎம்எஸ் மொத்தபாடல்களையும் பாடிய சிவாஜியின் தூக்கு தூக்கி வந்தது. பாடல்களே இடம்பெறாதா அந்த நாள் படமும் 1954ல்தான் வெளியானது

அறிமுகமாகி பதினாறு ஆண்டுகளாய் போராடிய எம்ஜிஆருக்கு மலைக்கள்ளன் என்ற படம் முதன்முதலாய் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்ததும் 1954ல்தான். எம்ஜிஆரின் அட்டகாசமான நடிப்பையும் இருவேறு பாத்திரங்களில் அவர் வசனங்களை உச்சரித்த விதமும ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. மலைக்கள்ளன் படம் தமிழகத்திற்கு முதன் முறையாக ஜனாதிபதியின் பதக்கத்தையும் பெற்றுத்தந்தது.

எல்லாவற்றையும்விட பாடகர் டிஎம்எஸ்சும் எம்ஜிஆரும் படங்களில் ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இணைந்திருந்தாலும், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என மெகா மெகா ஹிட் பாடல் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது. அவ்வளவு ஏன் 65 ஆண்டுகளாகி யும் இன்றும் அந்த பாடல் ஒலிக்காத நாள் உண்டா?

மலைக்கள்ளன் தந்த மாபெரும் வெற்றி, எம்ஜிஆர்தான் இனி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் மற்றும் வசூல் சக்கரவர்த்தி என அழுத்தந்திருத்தமாக கூறியது .அதனை அப்படியே நிரூபிக்கவும் செய்தார் எம்ஜிஆர் .

அடுத்தடுத்து வந்த குலேபகாவலி,அலிபாபா நாற்பது திருடர்கள், தாய்க்குபின் தாரம், மதுரைவீரன், சக்கரவர்த்தி திருமகள் என ஒவ்வொரு படமும் 100 நாட்கள், வெள்ளிவிழா என தாறுமாறாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தன.

மதுரைவீரன், புதுமைப்பித்தன், மகாதேவி போன்ற படங்கள் கலைஞர் மற்றும் கண்ணதாசனின் வசனங்களுக்காக பெரிதும் பேசப்பட்டன.

ஒருபக்கம் புகழ் வந்து குவிந்தாலும் இன்னொரு பக்கம் அவமானங்களையும் சந்தித்தார் எம்ஜிஆர் எனபதுதான் அதிர்ச்சியான விஷயம். அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் தயாரிப்பாளர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுதந்திரத்திற்கும் எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது கடைசியில் இந்த மோதல் எம் ஜி ஆரின் படத்தையோ பெயரையோ போடாமல் வெறும் பானுமதியை மட்டுமே பிரதானப்படுத்தி அலிபாபாவும் 40 திருடர்கள் ரிலீஸ் விளம்பரம் பத்திரிகைகளில் வெளியாகும் அளவுக்கு போனது. படத்தின் ஹீரோவின் பெயரே இல்லாமல் வெளியான முதல் விளம்பரம் அதுவாகக்கூட இருக்கலாம்.. இப்படி நொந்துபோனதால்தான், இனி பெரிய கம்பெனிகளில் நடிப்பதில்லை என்று எம்ஜிஆர் தீர்மானித்தார்.

தொடர்ந்து வெற்றிப் படங்கள் அமைந்து பொருளாதார ஏற்றம் பெற்ற நிலையில் தனது கனவுப்படமான நாடோடி மன்னன் படத்தை தொடங்கினார்..

தமிழில் பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர் பெற்ற ஜெமினி நிறுவனத்திற்கு நிகராக நாடோடி மன்னனை உருவாக்கினார் தன்னிடமிருந்த பணம் போக, வேண்டப்பட்ட இடங்களிலெல்லாம் கைநீட்டி கடன் வாங்கி இந்த படத்தை எடுத்தார். நடிப்பு இயக்கம் தயாரிப்பு என மூன்றையும் தன் தலைமீது சுமந்து கொண்டார்..

படப்பிடிப்பு நடந்த நாட்களில் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பணம் தண்ணீராக பாய்ந்தது.. மூன்று கதாநாயகிகள், ஏகப்பட்ட பாத்திரங்கள், பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் பாடலாசிரியர்கள், ஏகப்பட்ட அரங்க அமைப்புகள்..

பிரமாண்டம் என்ற பெயரில் என்ன செய்வதென்றே தெரியாமல் எம்ஜிஆர் பைத்தியக்காரத்தனமாக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பலரும் விமர்சித்தனர். அவ்வளவு ஏன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பானுமதி போன்ற நடிகைகளுக்கும் அந்த எண்ணம் தலைதூக்கியது, எதிர்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் எம்ஜிஆர் வைத்த ஒரே பதில், இந்த படம் ஓடினால் நான் மன்னன் இல்லையென்றால் நாடோடி.

1958 ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது நாடோடிமன்னன். மூன்றே முக்கால் மணி நேரம் போடும் படத்தில் சரோஜாதேவி தோன்றும் கடைசி ஒன்றேகால் மணி நேரம் முழுவதும் வண்ணப்படம்.

ஒரு ஆணும் பெண்ணும் திமுக கொடியை தாங்கியபடி எம் ஜி ஆர் பிக்சர்ஸ் இலச்சினை திரையில் தோன்றியது. தானிருந்த கட்சியின் கொடியையே படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த முதல் ஆள் எம்ஜிஆர் தான்.. அதுவும் எப்போது? வசூல் சக்ரவர்த்தியாக மாறி பல வெற்றி படங்களை கொடுத்த பிறகு.

அண்ணா போன்ற தலைவர்கள் தி மு க மேடையில் பேசுவதற்கு நிகராக நாடோடி மன்னன் திரைப்படம் ஒவ்வொரு திரையரங்குகளிலும் தினந்தோறு பல காட்சிகளாக பாமர மக்களிடம் திராவிட இயக்க அரசியலை பேசியது.

படத்தில் நாடோடியாக வரும் வீராங்கன் பாத்தி ரத்தை அப்படி அண்ணாவை மனதில் வைத்து உருவாக்கி படம் முழுக்க ஓடவிட்டிருந்தார் எம்ஜிஆர்.. மன்னர் ஆட்சியை எதிர்த்தும் மக்கள் ஆட்சியை எதிர்பார்த்தும், வீராங்கன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வசனமும் காங்கிரஸ் ஆட்சியை சீண்டிப்பார்க்கும் அறிஞர் அண்ணாவின் பேச்சை அப்படியே பிரதிபலித்தன. கறுப்பு சிவப்பு கொடியை யும் திமுகவும் நாடோடி மன்னன் படம் மூலம் எம்ஜிஆர் புகுந்திய விதத்தை தனி புத்தகமாகவே எழுதலாம்.

நாடோடி மன்னன் வெளியாகி எம்ஜிஆரை நாடோடியாக ஆக்கவில்லை. மன்னனாகவும் ஆக்கவில்லை. மன்னனுக்கும் மேலாக திரையலக சக்ரவர்த்தியாக ஆக்கியது.. திரையிட்ட இடங்களிலெல்லாம் 100 நாட்களையும் மாநகரங்களில் எல்லாம் வெள்ளி விழாக்களையும் கண்டது. அதற்கு முன்பு தமிழ் திரை உலக வரலாற்றில் ஒரு திரைப்படம் அந்த அளவுக்கு வெள்ளி விழாவ ஒரேசேர பல இடங்கிளில் குவித்ததில்லை.

புகழ் மற்றும் வசூலில் உச்சத்திற்கு போன எம்ஜிஆருக்கு கூடவே வந்தது மாபெரும் சோதனை. மரணத்தோடு போராட்டம். அடுத்தடுத்த படங்கள் தோல்வி.ஆனாலும் அனைத்தையும் மாற்றினார் அதிசயப்பிறவியான எம்ஜிஆர்.

புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், வாத்தியார் என மக்களின் வாயால் பல பட்டங்களோடு அவர் திரையுலகில் சாதனை படைத்து, அரசியலும் அசத்தி இந்த மாநிலத்தையே தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு ஆண்டுவிட்டுத்தான் போனார் என்றால் அது என்ன சாதாரண வரலாறாகவா இருக்கமுடியும்?..

அடுத்த பகுதியில் முடியும்..