சைதை துரைசாமி ஏற்பாட்டில் மறுஜென்மம் எடுக்கும் எம்.ஜி.ஆர். இல்லம்

எம்.ஜி.ஆர். என்கிற பெயர் ஏராளமான தமிழர்களுக்கு மூன்றெழுத்து மந்திரம். அவரது மறைவுக்குப் பிறகு முப்பது வருடங்கள் கழித்தும் இன்னும் அவரது ரசிகர்கள் – தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை.

சாதாரண பாமரர்களில் இருந்து, பெரிய வி.ஐ.பி.க்கள் வரை எம்.ஜி.ஆருக்கு பின்தொடர்பாளர்கள் உண்டு.

அப்படிப்பட்டவர்களில் ஒருவரான சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, எம்.ஜி.ஆருக்காக செய்திருக்கும் ஒரு செயல், அவரது தொண்டர்கள் மனதில் பெரும் மகிழ்ச்சியை.. இன்னும் சொல்லப்போனால் நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.

அது – சிதைந்து கிடந்த எம்.ஜி.ஆர். வீட்டை சீர் செய்து புத்துயிர் அளித்திருப்பது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலம் புதுநகரத்திலிருந்து தெற்கே செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது வடவனூர். இங்குதான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தாய் வழி பூர்வீக வீடு இருக்கிறது.

காலத்தின் வீச்சில் சிதைந்து, புதர் மண்டி வெறும் குப்பைக்காடாக மாறிப்போனது இந்த இல்லம்.

இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாக, உடனடியாக இந்த வீட்டை சீர் படுத்தும் முயற்சியில் இறங்கினார் சைதை துரைசாமி.

 

தற்போது பழைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது.  அதற்கு அருகில் இருந்த காலியிடத்தில் புது மண்டபங்களும், சிலை பீடங்களும் உருவாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த வீட்டை தரிசிக்க வரும் எம்.ஜி.ஆர். பக்தர்கள் தங்க வசதியான  அறைகளும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

குண்டும், குழியுமாய் கிடந்த அந்த வீட்டின்  திண்ணை தற்போது புதுக்காரை போடப்பட்டு பளிச் என காட்சியளிக்கிறது.

இடிந்து விழுவது போல் இருந்த வீட்டின் பக்கச்சுவர்கள் முழுமையாக பூசப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.  விலகிக்கிடந்த கூரை ஓடுகள் ஒழுங்கமைக்கப்பட்டு சீராக அமைக்கப்பட்டுள்ளது.

வீட்டினுள்ளே தரைத்தளம், அறைகள் அனைத்தும் புதுப்பொலிவுடன் பளிச்சிடுகின்றன. இந்த வீட்டின் பின்புறம் இருந்த பாழடைந்து கிடந்த கிணறு தூர் வாரப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் பொறிக்கப்பட்டிருந்த  ‘சத்தியவிலாஸம்’  என்ற பெயர் ஒளிர்கிறது.

கிணற்றுக்கு மோட்டார் வைக்கப்பட்டு, மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

வீட்டின் முன்புறத்தில் சிதைந்து கிடந்த மண்ணாலான சுற்றுச்சுவர் சிமெண்ட் காரை பூசப்பட்டிருக்கிறது.  அதில் ஒரு பீடம். அங்கு எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட இருக்கிறதாம்.

அருகே, சிதிலமடைந்து கிடந்த கழிப்பிடம்  சுத்தம் செய்யப்பட்டு அங்கே ஒரு பெரிய மண்டபம் எழும்பிக்கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே இங்கே இயங்கி வந்த அங்கன்வாடி மையம் செயல்படவும் புது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அங்கன்வாடி பள்ளி ஊழியர்களான சாந்தகுமாரி, பிரசன்னா ஆகியோர், “எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நினைவு நாளுக்கெல்லாம் அவரது தொண்டர்கள் இங்கே வந்து பார்த்துச் செல்வார்கள். “எம்.ஜி.ஆர். வீடு இப்படிக் கிடக்கிறதே” என்று வருத்தப்படுவார்கள். இப்போது புதுப்பொலிவுடன் வீடு புனர்ஜென்மம் எடுத்திருக்கிறது.

அப்புறம் சைதை துரைசாமி சொன்னதாக சென்னையில் இருந்து சிலர் இங்கே வந்தார்கள். பிறகு அவரே நேரடியாக வந்தார். சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, பஞ்சாயத்து போர்டிலும் அனுமதி பெற்று இந்த பணிகளை செய்துகொண்டிருக்கிறார்” என்றார்கள் மகிழ்ச்சியோடு.

எம்.ஜி.ஆர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது குறித்து சைதை துரைசாமியிடம் பேசினோம்.

சைதை துரைசாமி

அவர், “பலகோடி பேருக்கு எம்.ஜி.ஆர். தலைவர் மட்டுமல்ல.. தெய்வமும்கூட. அவரது வீடு சிதிலமடைந்து கிடப்பதாக தகவல் அறிந்தவுடன் துடித்துப்போனேன். உடனடியாக இந்த வீட்டை சீர் செய்யும் முயற்சியில் இறங்கினேன். முதலில் 25 லட்ச ரூபாய் ஆகும் என்று திட்டமிட்டோம். பிறகு பட்ஜெட் 50 லட்ச ரூபாயாக உயர்ந்தது.  எவ்வளவு செலவானால் என்ன.. தெய்வத்தின் இல்லம்.. கோயில். அதை புனரமைப்பது பக்தனின் கடமை அல்லவா” என்றார்.

மேலும், “இனி கேரளா செல்லும் தமிழர்களுக்கு இந்த இல்லமும் அவசியம் செல்லும் தலமாக விளங்கும்” என்றார் மகிழ்ச்சியோடு.

 

இந்த இல்லம் புதுப்பிக்கப்படுவது அங்குள்ள மக்களை உற்சாகப்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர் மியூசியம் ஒன்றை உள்ளூர் நபர்களே இணைந்து மில் ஒன்றில் உருவாக்கியிருக்கிறார்கள். அங்கு எம்.ஜி.ஆர் வரலாறு குறித்த புகைப்பட ஆல்பங்கள், நினைவுப் பொருட்கள் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

தங்களுடைய அரசியலுக்காக கடந்த வருடம் தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா நடத்திக் கொண்டிருந்தவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.