நியூஸ் 18 சேனலுக்கு. துரைமுருகன் அளித்த பேட்டியில் இருந்து…

எம்.ஜி.ஆர். தான் என்னை படிக்க வைத்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அவர் கோவாவில் இருந்தபோது, கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்ய உதவிகள் செய்தார்.

நான் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்தபோது நீ படி. அதுதான் நல்லது என்று சொல்லி சட்டக் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்தார். எனது திருமணத்தில் கலந்து கொள்ள சென்னை வரத் திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

அப்போது அவர் காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்தார். சென்னை வர இருந்த ஃப்ளைட்டை தவறவிட்டுவிட்டாராம். எப்படியும் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சார்டர்ட் ப்ளைட் ஏற்பாடு செய்து கொண்டு சென்னை வந்தார்
அவர். முதல்வர் ஆன பிறகு அவரை பார்ப்பதை நான் தவிர்த்து வந்தேன். ஒருநாள் எதிர்பாராமல் சட்டசபை கட்டிடத்தில் அவரை நேருக்கு நேர் பார்த்துவிட்டேன்.

உடனே என் சட்டையை இழுத்துப் பிடித்து ‘மேலே வா’ என்று தன் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ‘யார் யாரோ என்னிடம் அமைச்சராக இருக்கிறார்கள். நான் வளர்த்தவன் நீ. என்னிடம் தானே நீ இருக்க வேண்டும். என்ன இலாகா வேண்டும் என்று முடிவு செய். போ’ என்று கூறினார்.

அதற்கு ‘நான் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுகவுக்கு வந்தவன். அண்ணாவுக்குப் பிறகு கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டேன். என்னால் உங்களிடம் வர முடியாது. மன்னித்துவிடுங்கள். கலைஞர்தான் என் தலைவர்’ என்று கூறினேன்.
உடனே எம்.ஜி.ஆர் ‘அப்ப உனக்கு நான் யாரு? என்று கேட்டார்.

‘நீங்க என்னை வாழவெச்ச தெய்வம்’ என்று கூறி காலில் விழுந்தேன். ஏன்னைத் தூக்கி கட்டியணைத்து ‘சரி போயிட்டு வா’ என்று புரட்சித் தலைவர் அனுப்பி வைத்தார்.

நெகிழ்ச்சியுடன் இந்த சம்பவங்களை துரைமுருகன் தெரிவித்தபோது அவரது கண்கள் கலங்கி இருந்தன.