எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது நடந்தது என்ன?

நெட்டிசன்:

கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் பதிவில் இருந்து…

தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து மனிதநேயத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று தனது வேண்டுதலைத் தெரிவித்திருந்தார். இது ஒரு நல்ல துவக்கம். இந்த நினைவுகளோடு 1984 அக்டோபர் மாதம் நடந்த சில சம்பவங்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

அக்டோபர் 8, 1984 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆர். சளி, காய்ச்சல், ஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார்; அதற்கான சிகிச்சைதான் வழங்கப்படுகிறது என்று எம்.ஜி.ஆர். உடல்நிலைக் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் எம்.ஜி.ஆர். மிகவும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டதை சில நாட்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

எம்.ஜி.ஆர். மருத்துவமனையில்
எம்.ஜி.ஆர். மருத்துவமனையில்

இலங்கைப் பிரச்னை குறித்து பேசுவதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களோடு அவ்வப்போது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை அடியேன் சந்தித்ததுண்டு. அதிமுக கூட்டணியில் நெடுமாறன் இருந்தபோது, அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் என்னிடம் தெரிவித்தார். எனக்கு அது மலைப்பாக இருந்தது. ஏனெனில் சட்டக்கல்வியை முடித்துவிட்டு ஜூனியர் வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்தில் பணியில் இருக்கவேண்டிய நிலைமை. நெடுமாறன் மூலமாக சட்டமன்றத் தேர்தலுக்கு எதிர்காலத்தில் போட்டியிடலாம் என்று சொல்லிவிட்டேன். பின் அன்றைய அமைச்சர் எச்.வி.ஹண்டே மூலம் நல்லவன் என்ற சௌந்தர்ராஜன் போட்டியிட்டார்.

நான் அச்சமயம் பழ. நெடுமாறனின் தமிழ்நாடு காங்கிரஸ் (காமராஜர்) கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தேன். என்னோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த ’தஞ்சை ராமமூர்த்தி, க.பாரமலை, கே.எஸ்.பொன்னம்மாள், பொறையார் ஜம்பு ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், தி.சு.கிள்ளிவளவன் (இவர் 1950களில், ஆரம்பகட்டத்தில் அண்ணாவிடம் நெருக்கமாக இருந்தவர்), எம்.கே.டி.சுப்ரமணியம் (திமுகவை அண்ணா துவங்கும்போது ராபின்சன் பார்க்கில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமையில் நடந்த மேடையில் இருந்தவர். அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழிலும் இவர் பெயர் இடம் பெற்றது. அண்ணாவுக்கும், பெரியாருக்கும் நெருக்கமானவர். கலைஞர் அவர்களை அழைத்து சென்னையில் முதல் கூட்டத்தை நடத்தியவரும் இவர்தான். இவரது பூர்வீகம் விருதுநகர்.) ஆகியோரும் என்னுடன் பொதுச்செயலாளாராக இருந்தார்கள். இவர்கள் எல்லாம் பெருந்தலைவர் காமராஜரோடு நெருக்கமாக அரசியல் களத்தில் பணிகளை மேற்கொண்டவர்கள் கூட.

இந்த காலகட்டத்தில் நெடுமாறன் அதிமுக கூட்டணியைவிட்டு வெளியேறி திமுக கூட்டணியில் இடம்பெற்றார். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டபோது பழ.நெடுமாறனுடன் மூன்று தடவை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரைச் சந்திக்க சென்றிருக்கிறேன். அவருடைய அறைக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், பக்கத்து அறையில் அமர்ந்திருந்து ஜானகி அம்மாவிடம் எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்து விசாரிப்பது வாடிக்கை.

இந்நிலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நோயுற்ற எம்.ஜி.ஆரைப் பார்க்க வருகை புரிந்தார். நெடுமாறனை பார்த்து பழைய நினைவுகளோடு தலையை அசைத்துக் கொண்டு நெடுமாறனின் வணக்கத்தை பெற்றுக்கொண்டு சென்றார். எங்களோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கமும் உடனிருந்தார். அந்த அறையில் பண்ருட்டி ராமசந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ. கிருஷ்ணசாமி போன்றவர்களும் பார்வையாளர்கள் அறையில் அமர்ந்திருந்தார்கள்.

அறையின் வெளியே ஆர்.எம்.வீரப்பனும், சற்று தொலைவில் திருநாவுக்கரசரும் தனித்தனியாக அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு ஓரத்தில் அன்றைய அதிமுக எம்.பி.யும் இன்றைய முதல்வருமான ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து அருகில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் நாங்கள் அமர்ந்திருந்தோம். ‘நீங்க தலைவரைப் பார்த்தீர்களா?’ என்று சத்தியவாணி முத்து ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, ‘நான் இன்னும் பார்க்கவில்லை’ என்றார். இன்று அதே அறையில்தான் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

mgr-1

அந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் பிரச்சனை, இந்திராகாந்தி படுகொலை ஆகிய நிகழ்வுகள் என் கண்முன்னே வந்து செல்கின்றன. வெளிக்கடை சிறையிலிருந்து குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோர் கொடூரமாக கொல்லப்பட்டு அதிலிருந்து தப்பிவந்த நிர்மலா நித்யானந்தமும் சென்னைக்கு வந்தடைந்தார். அப்போதுதான் பணக்கொடா மகேஷ்வரன் டீ இயக்க தோழர் மீனம்பாக்கம் விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தாக்கினார் என்ற வழக்கும் நடைபெற்றது. இந்திரா காந்தியும், அக்டோபர் 31ம் தேதி காலை 9.25க்கு தன்னுடைய பாதுகாவலராலேயே சுட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்தப் பிரச்சினைக்கு இடையில் எம்.ஜி.ஆர். 5.11.1984 அன்று அமெரிக்காவுக்கு மருத்துவத்திற்காக தனி விமானத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் உதவியால் புரூகிளீன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அன்றைக்கு இந்திரா காந்தி அவர்கள் உயிரோடு இல்லை. அவரை அழைத்துச் செல்வதற்கு முதல் நாள் மத்திய அமைச்சர் நரசிம்மராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வரும்பொழுது நெடுமாறனோடு உடன் இருக்கவேண்டிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது நரசிம்மராவ் நெடுமாறனிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து இந்திரா காந்தியின் கொள்கையை ராஜீவ் கடைப்பிடிக்கச் சொல்லுங்கள் என்று நரசிம்மராவிடம் சொல்லும்பொழுது கேட்டுக்கொண்டிருந்தேன்.

இந்த நிலையில் இந்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் வந்தன. இந்தக் குறிப்புகளை எழுதவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அரசியலில் விமர்சனங்களும், எதிர்வினைகளும் இருந்தாலும் மனிதநேயத்தோடு ஜெயலலிதா நலம்பெற வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பம்.

அந்தக் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். உடல்நிலைக் குறித்து வார இதழ் ஒன்றில் வெளிவந்த செய்தி…..
============================== ============================== ============================

அக்டோபர் 1984 அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் குணமடைவார் என்று நினைத்திருந்த நிலையில் அவரது உடல் நிலை மேலும் மோசமானது . அது வரை இல்லாத விதமாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவரை பார்க்க சென்னைக்கு விரைந்தார். 16/10/1984 அன்று இந்திரா காந்தி அப்போல்லோ மருத்துவமனைக்கு வருகைத் தந்தார் , அது வரை யாரையும் எம்.ஜி.ஆரை. பார்க்க அனுமதிக்கப்படவில்லை , அவர் சென்று பார்த்தார் , கண்ணாடிக் கதவு வழியே பார்க்க அனுமதிக்கப் பட்டார் , அதிர்ந்து போனார் ” IS THAT MGR ? OH MY GOD , I CANT BELIEVE IT ” என்று அவர் சொன்னது இன்றளவும் நினைவு கூரப் படுகிறது .

அருகில் இருந்த ஜானக்கியம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி ஆறுதல் கூறினார் , கவலை படாதீர்கள் இவர் நாட்டின் சொத்து , கண்டிப்பாக இவரை காப்பாற்றுவது இந்த தேசத்தின் கடமை , இவருக்கு உயர் சிக்கிச்சை அளிக்க வெளி நாட்டிலிருந்து மருத்துவர்களை வரவழைப்போம்,இவர் காப்பாற்றப் படப் போவது உறுதி என்று கூறினார் . வெறும் வார்த்தைகளாக மட்டும் அதை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை ,அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார் .

தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது, இந்திரா காந்தியின் யோசனையை ஏற்பது என்று முடிவானது . இந்திய பிரதமர் ஆணை பிறப்பித்தால் அதுவும் இந்திரா காந்தி ஆணை பிறப்பித்தால் நடக்காமல் இருக்குமா ? அவர்வந்து பார்த்து விட்டுப் போன மறுதினமே 17-10-1984 அன்று பிரதமரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டு சென்னை அப்போலோவுக்குள் நுழைந்தனர் . அது மட்டுமா? பிரதமரின் நேரடி உத்தரவின் பெயரில் ஏர் இந்தியா போயிங் ரகவிமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிரத்யேகமாக எம்.ஜி.ஆருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . எந்த நேரமும் அவருக்கு மருத்துவர்களை அழைத்து வருவதற்கும் அவரை வேறு நாட்டிற்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதற்கும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது . விமான குழுவினர் இதற்காகவே விமானத்திலேயே தங்க வைக்கப் பட்டிருந்தனர் .

டாக்டர் எலி ப்ரைட்மேன் என்கிற அமெரிக்க மருத்துவர் தலைமையிலான குழு எம்.ஜி.ஆருக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தது . 10 நாட்கள் அவரை விமானத்தில் அழைத்துச் செல்ல இயலாத அளவிற்கு உடல் நிலை மோசமாக இருப்பதாக அந்தக் குழு தெரிவித்தால் , மும்பைக்கு திரும்பிச் சென்றது அந்த விமானம் .

எனினும் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது , அவரது மூளையில் டென்னிஸ் பந்து அளவிற்கு கட்டி இருப்பது தெரிய வந்தது. அக்டோபர் 19 1984 அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் சுயநினைவை இழந்தார் . நரம்பியல் நிபுணரான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கண்ணோ டோக்யியோ விலிருந்து வரவழைக்கப் பட்டார் , அவரும் அவரது உதவியாளர் டாக்டர் நகமுராவும் டோக்கியோவிலிருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்து அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பைக்கு வந்து அங்கிருந்து சென்னை அழைத்து வருவதாகத் தான் திட்டமிடப் பட்டிருந்தது . ஆனால் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக இருந்ததால் தமிழக அமைச்சரவை மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து விமானத்தை அவசரமாக சென்னையில் தரை இறக்க கேட்டுக் கொண்டது , அதுவும் ஏற்கப் பட்ட நிலையில் , இன்னொரு அதிர்ச்சி , டோக்கியோவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தால் மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தை தவற விட்டுவிட்டனர் என்பது தான் .

இப்பொழுதைப் போல எல்லாம் அப்பொழுது விமானப் போக்குவரத்துக்கள் அதிகமாக இல்லாத தருணம் , அடுத்த விமானம் சென்னை விமான தளத்திற்கு 20மனி நேரத்திற்கு பின்னர் தான் வரவிருந்தது . எல்லோருக்கும் பி பி எகிற ஆரம்பித்தது . அப்பொழுது இன்னொரு அவசர திட்டத்தை வகுத்தனர் , ஏற்கனவே எம்.ஜி.ஆருக்காக மும்பையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை சிங்கபூருக்கு அனுப்பி அங்கிருந்து அந்த மருத்துவர்களை இங்கே அழைத்து வரலாம் என்றால் , அது வரை பறக்கும் வசதி அந்த விமானத்திற்கு இல்லை , சரி என்று , சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தையே பிரத்யேகமாக அந்த இரண்டு மருத்துவர்களுக்காக மட்டும் அங்கிருந்து சென்னை இயக்க வைக்கலாம் என்று முடிவானது , அதற்கு அவர்கள் கோரிய தொகை ஒரு மணி நேரத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் . 8 மணி நேர பயணத்திற்கு 10 லட்சம் ரூபாய் என்றார்கள் , அதை கொடுக்க அ தி மு க தயார் என்றாலும் நள்ளிரவில் பணத்தை செலுத்தி விமானத்தை இயக்க வைப்பது என்பது கடினமான விஷயமாகவே இருந்தது .

உடனே மத்திய அரசாங்கம் சிங்கபூருக்கான இந்திய தூதுவரை தொடர்பு கொண்டது , அதற்கும் கூட முதலில் வெளியுறவுத் துறை செயலாளரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து நள்ளிரவில் அது முடியாமல் போக , அப்பொழுதைய திட்டக் கமிஷன் தலைவர் ஜி பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சிங்கப்பூர் தொடர்பு கொள்ளப் பட்டு வெறும் 2 மருத்துவர்களுக்காக 6 பேர் விமானக் குழு கொண்ட 350 பேரை அமர்த்தும் வசதி கொண்ட போயிங் 747 ரகவிமானம் மூன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தது , டாக்டர் கன்னோவையும் அவரது உதவியாளர் நகமுராவையும் சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற அப்பொழுதைய மாநில அமைச்சர் டாக்டர் ஹண்டே அவர்களை அங்கிருந்து நேராக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் . அதன் பின்னர் இரண்டு நாட்களில் எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப் பட்டது …

இது அனைத்திற்கும் முழு ஒத்துழைப்புகொடுத்தது இந்திரா காந்தியின் அரசாங்கம் என்பதை விட இந்திரா காந்தி அவர்களின் மனித நேயம் தான்

கார்ட்டூன் கேலரி