பிரதமர் மோடிக்கு உயர்மட்ட பாதுகாப்பு: மறுப்பு தெரிவித்து உள்துறை அமைச்சகம் விளக்கம்

பிரதமர் மோடியின் உயிருக்கு  மாவோயிஸ்டுகளால் ஆபத்து ஏற்பட இருப்பதாக கிடைத்த கடிதத்தின் அடிப்படையில், பிரதமருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், பிரதமர் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் தவறு என்று மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், பிரதமர் மோடி பாதுகாப்பு குறித்து வெளியான தகவல்கள் தவறு என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் சாலை நிகழ்ச்சிகள்  குறித்தும் பாதுகாப்பு குறித்தும் மட்டுமே அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்மையில்  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உள்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில், பிரதமரின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும்,  பிரதமரின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, பாதுகாப்பு அமைப்புகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.

இது பரபரப்பாக பேசப்பட்டது.  பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக  மாநிலங்களுக்கும் புதிய வழிகாட்டுதல் களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்ததாக கூறப்பட்டது. அதில்,  பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி படையினரின் சோதனைக்கு உட்பட்ட பிறகே, முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும், பிரதமரின் அருகில் செல்ல முடியும் என்றும்,  தேர்தல் நேரத்தில், வாகனத்தில் இருந்தவாறு சாலையில் பிரச்சாரம் மேற்கொள்வதை குறைத்துக் கொள்ளவும், அதற்குப் பதிலாக, பொதுக்கூட்டங்களில் பேசும்படியும், பிரதமரை கேட்டுக்கொள்வதாகவும் கூறப்பட்டிருந்ததாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் உள்துறை அமைச்சம் அதை மறுத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.