மோடியை விமர்சித்த எழுத்தாளர் ஆதிஷ் தசீர் குடியுரிமையை ரத்து செய்த மத்திய அரசு

டில்லி

ழுத்தாளர் ஆதிஷ் தசீருக்கு அளிக்கப்பட்டிருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் என்னும் குடியுரிமை அந்தஸ்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

பிரபல எழுத்தாளரான ஆதிஷ் தசீர் அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வருகிறார்.  இவருடைய தந்தை சல்மான் தசீர் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஆளுநராகப் பணி புரிந்தவர் ஆவார்.  இவரைக் கடந்த 2011 ஆம் வருடம் இவருடைய மெய்க்காப்பாளர் கொலை செய்தார்.   தசீரின் தாய் தவ்லீன் சிங் இந்திய எழுத்தாளர் ஆவார்.

சிறுவயதிலேயே இவருடைய தாயும் தந்தையும் பிரிந்து விட்டதால் தசீரை அவருடைய தாய் மிகவும் சிரமப்பட்டு வளர்த்துள்ளார்.  இதற்காகத் தனது தாய் பட்ட துயரங்களை தசீர் 2007 ஆம் ஆண்டு பிரசுரமான தனது சரித்திரத்துக்கு அன்னியன் என்னும் ஆங்கில புத்தகத்தில் விவரித்துள்ளார்.  கடந்த மே மாதம் வெளியான டைம் பத்திரிகையில் இவர் மோடியை இந்தியப் பிரிவினையின் தலைவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது பாஜகவினரிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கியது.    பாகிஸ்தான் மாநில ஆளுநரின் மகன் என்பதால் ஆதிஷ் தசீர் இவ்வாறு எழுதியதாகப்  பலரும் புகார் தெரிவித்தனர். இதற்கு ஆதிஷ் தசீர் பதில் அளித்தும் அதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை. இதை ஒட்டி ஆதிஷ் தசீருக்கு வழங்கப்பட்டிருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் என்னும் குடியுரிமை அந்தஸ்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.