கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தூத்துக்குடி மக்களவை தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார். இதையடுத்து தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து, தமிழிசை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதால், அவ்வழக்கை அவர் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் திரும்பப்பெற்றார்.

இந்நிலையில், கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தமிழிசை சௌந்திரராஜனுக்கு பதிலாக, தான் நடத்த அனுமதிக்க கோரி அத்தொகுதியை சேர்ந்த வாக்காளரான முத்துராமலிங்கம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது ஏற்கனவே விசாரணை தொடங்கிய நிலையில், கடந்த விசாரணையின் போது போதிய ஒத்துழைப்பு அளிக்க கோரி மனுதாரரனுக்கு நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. தற்போது அம்மனு மீதான விசாரணை, இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

கடந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாத நிலையில், இந்த விசாரணையிலும் யாரும் ஆஜராகவில்லை எனில், வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.