ஃபிராங்பர்ட்: உலகப் புகழ்பெற்ற முன்னாள் கார்பந்தய வீரர் மைக்கேல் ஷுமேக்கரின் மகன் மைக் ஷுமேக்கர், முதன்முதலாக அதிகாரப்பூர்வ ஃபார்முலா 1 கார்பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார்.

ஃபெராரியின் இளம் ஓட்டுநர் திட்டத்தின் உறுப்பினர் என்ற முறையில், ஜெர்மனியிலுள்ள, அவரின் குடும்பத்திற்கு விருப்பமான பயிற்சி களத்தில், ஆல்ஃபா ரோமியோவில் மைக் ஷுமேக்கர் பயிற்சி பெறவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதியில், முதல் செஷனுக்காக அன்டானியோ ஜியோவினாஸிஸ் காரை அவர் பயன்படுத்தவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

“இலவச பயிற்சியில் இந்த வாய்ப்பை நான் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை நான் போட்டிக்காக முழுமையாக தயார்செய்து கொள்வேன். இதன்மூலம், எனது அணியினருடன் ஒரு சிறந்த சாத்தியமுள்ள பங்களிப்பை நான் அளிப்பதோடு, வார இறுதியில் ஒரு மதிப்புமிக்க தரவையும் பெற முடியும்” என்றுள்ளார் மைக்.

தற்போது 21 வயதாகும் அவர், மோன்ஸா மற்றும் சோச்சியில் போட்டிகளை வென்ற பிறகு, ஃபார்முலா 2 போட்டிகளில் தலைமையேற்றார். கடந்த 2018ம் ஆண்டு ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பை வென்றார்.