மனித உடலினுள் பொருத்தப்படும் மைக்ரோ சிப்புகள்!!

விஸ்கான்சின், அமெரிக்கா.

மெரிக்காவில் விஸ்கான்சின் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் 50 ஊழியர்களுக்கு உடலில் மைக்ரோசிப்புகள் சோதனைக்காக பொருத்தப்பட உள்ளன.

மைக்ரோ சிப் எனப்படுவது, ஒரு அரிசி அளவிலான கம்ப்யூட்டர் சிப்புகள் ஆகும்.  இது ஒருவகையில் ரிமோட் கண்ட்ரோல் எனவும் சொல்லலாம்.  இத்தகைய சிப்புகளை சோதனைக்காக மனித உடலில் செலுத்த ஒரு அமெரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் 50 ஊழியர்கள் தெர்ந்தெடுக்கப்பட்டு சம்மதம் பெறப்பட்டுள்ளது.  அடுத்த வாரம் இந்த சிப்புகளை அந்த ஊழியர்கள் உடலில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தகைய சிப்புகள் அமெரிக்காவின் திரி ஸ்கொயர் மார்கெட்டிங் என்னும் மென்பொருள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு. இந்த சிப்புகள் அமெரிக்க நிறுவனத்தின் ஊழியர்களின் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் திரி ச்கொயர் மார்கெடிங் ஊழியர்களால் பொருத்தப்படும்.  இது பொருத்தும் போது வலி ஏதும் இருக்காது.  இதை பொருத்தக் கட்டணமாக திரி ஸ்கொயர் மார்கெட்டிங் 300 டாலர்கள் வசூலிக்கிறது.

ஒவ்வொரு நிறுவனமும் அடையாள அட்டையை தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கிறது.  இனி அதற்கு பதில் இந்த சிப்புகள் உபயோகப்படுத்தப்படலாம்.  ஊழியர்கள் அலுவலகத்தினுள் நுழைய இந்த அட்டைகளை தேய்த்து அல்லது காட்டி விட்டு செல்ல வேண்டும்.  ஆனால் வெறுமே கையை அசைப்பதன் மூலமே கதவுகள் திறக்கும்.  அது மட்டும் அல்ல,  இந்த சிப்புகள் பொருட்களை வாங்கும் இடங்களிலும், வங்கி ஏடிஎம் ஆகிய இடங்களிலும் கையை அசைப்பதின் மூலம் உபயோகப்படுத்த முடியும்.  இதில் ஜி பி ஆர் எஸ் வசதி பொருத்தப்படாததால் ஊழியர்களின் தனித்தன்மைக்கு எவ்வித குந்தகமும் நிகழாது” என அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

”எதிர்காலத்தில் அனைத்து இடங்களிலும் இந்த சிப் பயன்படுத்தப்படும்.  அது மட்டும் இல்லை.  காலப்போக்கில் ஊழியர்கள் எனக்குள் சிப் பொருத்தப்பட்டுள்ளது என பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்” என அந்த மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சோதனை வெற்றி அடைந்தால் இந்த சிப்புகள் உபயோகப்படுத்துவதன் மூலம், பாஸ்போர்ட்டுகள், ரெயில் அல்லது பஸ் டிக்கட்டுகள் ஆகியவற்றுக்கும் மாற்றாக பயன்படுத்தலாம்.  ஆனால் என்னதான் உறுதி அளித்தாலும் அனைத்து ஊழியர்களும் இதை பொருத்திக் கொள்ள விரும்பவில்லை.  85 பேர் பணிபுரியும் இடத்தில் 50 பேர்கள் மட்டுமே இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.