சென்னை

சென்னை காசிமேடு துறைமுகம் அருகில் கிடைத்த கடற்சிப்பிகள் வயிற்றில் மிகச்  சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் நிறமூட்டிகள் இருந்துள்ளன.

பிளாஸ்டிக் என்பது மட்கிப் போகாத  பொருட்கள் என்பதை அனைவரும் அறிவோம்.    பிளாஸ்டிக்கினால் நிலம் மாசடைவதால் பல உடல்நலக்கேடுகள் உண்டாகின்றன.  சமீபத்தில் பிளாஸ்டிக் பைகளைத் தின்ற பல பசுமாடுகள் இறந்ததாகச் செய்திகள் வெளியாகின.   கேரளாவில் ஒரு புகழ்பெற்ற கோவில் அருகில் உள்ள காட்டுயானை ஒன்று பிளாஸ்டிக் பைகளைச் சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே மத்திய மாநில அரசுகள் மறு சுழற்சி செய்ய முடியாத மிகவும்  மெல்லிய  பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளன.  ஆயினும் இத்தகைய பிளாஸ்டிக்குகள் குப்பையில் போடப்படுவதால் அவற்றை அழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அத்துடன் பலரும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அழிக்க முடியாது என்பதால் நதிகளில் வீசி எறிந்து விடுகின்றனர்.

குறிப்பாகக் கடந்த 2015 ஆம் வருடம் நவம்பர் மாதம் சென்னை நகரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இத்தகைய பிளாஸ்டிக் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலந்துள்ளன. .    கடல்நீராலும் அழிக்க முடியாத நிலையில் உள்ள இந்த  பிளாஸ்டிக் மிக மிகச் சிறிய துகள்களாகி கடலில் மிதந்துள்ளன.   சமீபகாலமாகப் பல மேலை நாடுகளில் கடல் வாழ் உயிரினங்களின் வயிற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடைத்துள்ளன.

அதையொட்டி தேசிய கடற்கரைப் பகுதி ஆய்வு மையம் ஒரு ஆய்வை நடத்தியது.  இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானி எஸ் ஏ நாயுடு, “கடல் வாழ் உயிரினங்களை ஆய்வு செய்த போது சென்னை காசிமேடு துறைமுகம் அருகே பிடிபட்ட கடற்சிப்பிகளின் வயிற்றில் மிக மிக நுண்ணிய  அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் கிடைத்துள்ளன.  இந்தியாவில் இவ்வாறு கிடைப்பது முதல் முறை ஆகும்.  இந்த துகள்கள் சுமார் 30 மைக்ரோன் அளவில் இருந்துள்ளன. (ஆயிரம் மைக்ரான்கள் என்பது ஒரு மில்லி மீட்டர் ஆகும்)

அத்துடன் அந்த சிப்பிகள் உடலில் பல வண்ணங்கள் கிடைத்துள்ளன.  இந்த  வண்ணங்கள் பிளாஸ்டிக் நிறமூட்டிகள் ஆகும்.  இவை பிளாஸ்டிக், துணிகள், உணவுப்பொருட்கள், ஆகியவற்றில் இருந்து கடலில் கரைந்திருக்கலாம் என தோன்றுகிறது.   இந்த நிறமூட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் சேர்வதாலும் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.

இந்த கடற்சிப்பிகள் உணவாக  பயன்படுத்தப்படவில்லை என்பதால் மனிதர்களுக்கு அபாயம் ஏற்பட வாய்ப்பு இல்லை.   ஆனால் கடற்கரை ஓரமுள்ள மற்ற கடல் வாழ் உயிரினங்களும் இதை உட்கொண்டிருந்தால் அந்த பாதிப்பு மனிதர்களையும் தாக்கலாம்.   எனவே  மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை நீர் நிலையில் எறிவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Thanx : Mongabay.com