மீரட்

திய உணவுக்காக அரசு அளிக்கும் அரிசியை மீரட் நகரில்  மாட்டுத்தீவனமாக உபயோகிப்பட்டதை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர்.

நாடெங்கும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் 1995ல் துவங்கப்பட்டது.   தமிழ்நாட்டில் அந்த திட்டம் காமராஜர் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த 1995 மதிய உணவுத் திட்டத்துக்கு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து அரிசி வழங்கப்பட்டு வருகிறது.  இந்த திட்டம் எவ்வளவு தூரம் புகழ் பெற்றுள்ளதோ அதே அளவு ஊழலும் மிகுந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சத்துணவை மாணவர்களுக்கு தடையின்றி வழங்க அரசு சார்பில் உணவுப் பொருட்களும், அது தவிர நாடெங்கும் 25.5 லட்சம் பணியாளர்களும் அமர்த்தப் பட்டுள்ளனர்.  இலவச மதிய உணவு அங்கன் வாடி மையம் என அழைக்கப்படும் சத்துணவு கூடங்களில் வழங்கப்படுகிறது  சமீபத்தில் ஒரிசாவில் சத்துணவு சாப்பிட்ட 230 குழந்தைகள் உடல்நலக் கேடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அரியானாவில் சத்துணவில் ஒரு பாம்பு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் உத்திரப் பிரதேச மாநில மீரட் நகரில் சுமார் 160 கிலோ அரிசி மாட்டுத் தீவனத்துக்காக ஒரு பால் பண்ணைக்கு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  பண்ணையின் உரிமையாளர் பிரவின் குமார், மற்றும் அந்த அரிசி வழங்கப்பட்ட சத்துணவுக் கூட பொறுப்பாளர் உமாதேவி, அவர் கணவர் குன்வர் செயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரித்ததில் அந்த சத்துணவு மையத்தில் கடந்த மூன்று வருடங்களாக எந்தக் குழந்தைக்கும் உணவு வழங்காதது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  மீரட் நகரில் 1561 பள்ளிகளில் படிக்கும் சுமார் 1.73 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.  சமீபத்தில் அரசு ஆணைப்படி மதிய உணவுக்கு ஆதார் கார்ட் அவசியம் என சொல்லப்பட்ட போதிலும் சுமார் 29000 மாணவர்கள் மட்டுமே அதாவது 17% மாணவர்கள் மட்டுமே ஆதார் எண்ணை அளித்ததாக தெரிய வந்துள்ளது.