முதல் டெஸ்ட் – கதிகலங்கிய டாப் ஆர்டர்; கை கொடுத்த மிடில் ஆர்டர்!

ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள், இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 203 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகவே துவங்கியது. மேலும், மழையின் காரணமாக பிட்ச் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டது. எனவே, இந்தியா டாஸ் வெல்வது அவசியம் என கருதப்பட்ட நிலையில், டாஸ் வென்றதோ எதிரணி.

நிலைமையை உணர்ந்து மேற்கிந்திய தீவுகள் பவுலிங்கை தேர்வுசெய்ய, இந்தியா களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சொல்லிவைத்தாற் போலவே டாப் ஆர்டர் கதிகலங்கிப் போனது.
சிறப்பாக தாக்குப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மாயன்க் அகர்வால் 5 ரன்னிலும், புஜாரா 2 ரன்னிலும் நடையைக் கட்டினர்.

இருவரையும் காலி செய்தது கேமர் ரோச். சரி, கேப்டன் கோலி இந்த இன்னிங்சில் சதமடிப்பது நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 9 ரன்களில் காலி.

எனவே, துவக்க வீரராக களமிறங்கிய ராகுலும், 5வது வீரராக வந்த ரஹானேவும்தான் அணியை மீட்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். ராஹானே 81 ரன்களும், ராகுல் 44 ரன்களும் அடித்தனர்.

ஆறாவது வீரராக களமிறங்கிய ஹனுமா விஹாரி தன் பங்கிற்கு 32 ரன்களை எடுத்துக் கொடுத்தார். தற்போது களத்தில், ரிஷப் பண்ட் 20 ரன்களுடனும், ஜடேஜா 3 ரன்களுடனும் உள்ளனர். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இவர்கள் இருவரும் நிலைத்து நின்று ரன்னை 300க்கு மேல் கொண்டுசெல்லும் பட்சத்தில், மேற்கிந்திய அணியை ஒரு கை பார்க்கும் வாய்ப்புள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில், கேமர் ரோச் 3 விக்கெட்டுகளும், கேப்ரியல் 2 விக்கெட்டுகளும், சேஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.