கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.


மார்ச் 21-ம் தேதி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்தது. இதில் மேற்கு வங்க பாஜகவினர் கடும் அதிருப்தியடைந்தனர்.
உண்மையாக உழைத்தவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதாக பல மாவட்டங்களிலிருந்து பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த நிதிஸ் பிரமானிக்கிற்கு சீட் மறுக்கப்பட்டதால், நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

இவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதால் சீட் வழங்கப்படவில்லை என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாஜக மாநில பொதுச்செயலாளர் சத்யந்தன் பாசுவுக்கு எதிராக பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ள பஷிரத் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

எங்களுக்கு சத்யந்தன் பாசு தேவையில்லை. சத்யந்தன் பாசுவைவிட நோட்டா மேலானது என்று போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து பஷிரத் பாஜக தலைவர் கோபால் கோஷ் கூறும்போது, கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் திரிணாமூல் காங்கிரஸார் வதந்தியை கிளப்பிவிடுகின்றனர் என்றனர்.

மேற்கு வங்கத்தின் பல தொகுதிகளில் உள்ளூர் வேட்பாளர்களுக்கு பதிலாக, வெளியூர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
எங்களுக்கு உள்ளூர் வேட்பாளர்கள் வேண்டும் என்று பாஜகவினர் கோரி வருகின்றனர்.

முக்கிய திருப்பமாக, சீட் தராததால் கடந்த மார்ச் 22-ம் தேதி பாஜகவின் துணை தலைவர் ராஜ் கமல் பதக் கட்சியிலிருந்து விலகினார்.

தான் 28 ஆண்டுகள் கட்சிக்கு உழைத்த தமக்கு சீட் மறுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரனாகத் தொகுதியில் பாஜக வேட்பாளரே இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், அக்கட்சியை சேர்ந்த அர்ச்சனா மஜும்தார் என்பவர் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டார்.

கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் ஒத்துக் கொண்டுள்ளார்.
“வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது இதுபோன்ற சூழல் ஏற்படுவது சகஜம்தான். இதனை பேசித் தீர்த்துக் கொள்வோம்” என்றார்.