கொல்கத்தா:

பிரதமர் மோடிக்கு பரிசும் இனிப்பும் அனுப்புவோம். ஆனால் ஒரு ஓட்டு கூட இங்கிருந்து போகாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


பிரபல இந்தி நடிகர் அக்சய் குமாருக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனக்கு ஆண்டுதோறும் இனிப்பும், பரிசும் அனுப்புவார். இதைப் பார்த்து மம்தா பானர்ஜியும் எனக்கு குர்தாவும், இனிப்பும் அனுப்பி வருகிறார் என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் பிரதமருக்கு பதில் அளித்துப் பேசிய மம்தா பானர்ஜி, நான் பரிசு அனுப்புவேன், ரசகுல்லா அனுப்புவேன். ஆனால் மோடிக்கு இங்கிருந்து ஒட்டு மட்டும் அனுப்ப மாட்டேன் என்றார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக மாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டிய மம்தா, அந்த பணத்தை வைத்து தற்போது வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

மேற்குவங்கத்தில் உங்கள் வேலை நடக்காது என்று கூறிய மம்தா, தேர்தலுக்குப் பிறகு நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் முறைகேடு என்பதை எங்கள் அரசு நிரூபிக்கும் என்றார்.

மேற்குவங்கத்தில் பாஜக குண்டர்கள் மிரட்டல் விடுக்கும் வகையில் இடையூறு செய்து வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், தமது அரசு அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மோடியை தோற்கடியுங்கள் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்த மம்தா, நம் நாட்டையும், அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற வேண்டுமானால், மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றி பேரழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.