பாட்னா:

சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் ஒரு இளம்பெண், உணவு இல்லாமல் இறந்த நிலையில், அவர்  உயிரிழந்ததை அறியாத அவரது பிஞ்சு குழந்தை அவரை எழுப்ப முயன்ற சம்பவம் கல் மனதையும் கரையச் செய்கிறது.

கொரோனா ஊரடங்கு விவகாரத்தில், மத்திய மாநில அரசுகளின்  சரியான திட்டமிடல் இல்லாத நிலையால், வாழ்வாதாரம் இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

அவர்களில் ஏராளமானோர் நடைபயணம் மூலம் நடக்க தொடங்கி உள்ள நிலையில், சிலர் தற்போது அரசு அறிவித்துள்ள சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு இன்னல்களை சந்தித்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அவர்களின் உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பலர் பசி பட்டினியால் உயிர்களை இழந்து வருகின்றனர்.

கால்நடையாக செல்லும் சிலர் ஊருக்கு அருகிலேயே மயங்கி விழுந்து உயிரிழக்கும் கோர நிகழ்வுகளும், ஏராளமானோர் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், குஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பிகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், அந்த பெண் உணவின்றி பசியால் தவித்து வந்த நிலையில், ரயில் முசாபர்பூரை நெருங்கும்போது பரிதாபகமாக  உயிரிழந்துள்ளார்.

இந்த பெண்ணின் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், அவரது உடல் அங்குள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் கிடத்தப்பட்டு, போர்வையால் மூடப்பட்டது. அந்த பெண்ணைச் சுற்றி அவரது 2 குழந்தைகளும் நின்று கொண்டிருந்தன.

அப்போது, சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க அவரது குழந்தை, பிஞ்சு குழந்தை, தாய் இறந்தது தெரியாமல், அவரை மூடியிருந்த போர்வையைத் தூக்கி தன்மீது போர்த்தியும், அந்த தாயை எழுப்பவும்  முயற்சிக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது…

இதை பார்ப்பவர்களின் கண்ணில் ரத்தக்கண்ணீர் வருகிறது…

Video Credit:  Valley Online