டில்லி

புலம்பெயர் தொழிலாளருக்கான ஷ்ராமிக் ரயில் கட்டணங்களை மத்திய அரசு செலுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய திடீர் என அறிவித்த ஊரடங்கு காரணமாக போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.   இதனால் நாடெங்கும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.  கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டு ஊதியம் இல்லாத தொழிலாளர்கள் உணவு இன்றி தவித்து வந்தனர்.

தற்போது நடைபெறும் நான்காம் கட்ட ஊரடங்கில் விதிகள் தளர்த்தப்பட்டு புலம்பெயர் தொழிலாளர் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஷ்ராமிக் என்னும் சிறப்பு ரயில் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.    இந்த சேவை இலவசம் அல்ல எனவும் இதற்காகக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தகவல்கள் வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.  காங்கிரஸ் கட்சி இந்த பயணக் கட்டணத்தை ஏற்க முன் வந்தது.

அதன் பிறகு வந்த தகவல்களில் 85% கட்டணத்தை மத்திய அரசும் மீதமுள்ள 15% கட்டணத்தை மாநில அரசுகளும் செலுத்தும் எனவும் கூறப்பட்டது.  இதை பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ராவும் வெளியிட்டிருந்தார்.  ரயில்வே நிர்வாகம் இந்த தகவல் மறுத்ததால் குழப்பம் உண்டானது.

இதையொட்டி புலம்பெயர் தொழிலாளர் விவகாரம் குறித்து பதியப்பட்ட வழக்கில்  உச்சநீதிமன்றம் விளக்கம் கோரி இருந்தது.  இதற்கு மத்திய அரசின் வழக்கறிஞரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா  அளித்துள்ள விளக்கத்தில்,”ஷார்மிக் ரயிலில் பயணம் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.  இந்தக் கட்டணத்தைத் தொழிலாளர்களை அனுப்பும் அல்லது வந்து சேரும் மாநிலங்கள் அளிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வழக்கறிஞர் அளித்துள்ள இந்த விளக்கத்தின் மூலம் முதலில் மத்திய அரசு கட்டணங்களில் 85% ஏற்றுக் கொள்கிறது என தெரிவித்தது தவறானது எனத் தெரிய வந்துள்ளது.  மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த கட்டணமும் செலுத்துவதில்லை என்பதும் அனைத்தும் அந்தந்த மாநில அரசுகளே ஏற்கின்றன என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.