கால்நடையாக இறந்த கங்கம்மா..   நடுவழியில் நேர்ந்த பரிதாபம்… 

கால்நடையாக இறந்த கங்கம்மா..   நடுவழியில் நேர்ந்த பரிதாபம்…


நாடு தழுவிய ஊரடங்கு பறித்துக்கொண்ட உயிர்களில் ஒருத்தி, கங்கம்மா.

கர்நாடகம் மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த கங்கம்மா, பிழைப்புக்காகப் பெங்களூரு வந்து தங்கி இருந்து கூலி வேலை செய்து காலம் ஓட்டி வந்தார்.
கணவனுடன் சேர்ந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருந்த அவரின் வாழ்க்கையில் ஊரடங்கு என்ற பெயரில் விதி விளையாடியது.

ஊரடங்குக்கு முன்பாக கணவன் உகாடி பண்டிகை கொண்டாட ஊர் போய்ச் சேர்ந்து விட்டார்.

அதன் பிறகு ஊரடங்கு அறிவிக்கப்பட-

வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இங்கே வேலை இல்லை.

உணவு இல்லை.

உறைவிடமும் இல்லை.
300 கி.மீ. தொலைவில் உள்ள ராய்ச்சூருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தார்.

நடந்தார்.

நடந்து கொண்டே இருந்தார்.

வழியில் பெல்லாரியில் கங்கம்மா இறந்து போனார்.

‘’பட்டினியால் என் மனைவி செத்துப்போனாள். பெல்லாரியில் உள்ள முகாமில் அவளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் ஊழியர்கள் அலட்சியமாக நடந்துள்ளனர்’’ என்று கங்கம்மா கணவர் புகார் பட்டியல் வாசிக்க-

‘’கங்கம்மாவுக்கு கிட்னி கோளாறு இருந்தது. கூடவே மஞ்சள் காமாலையும் இருந்ததால் இறந்து போனாள்’’ என்று டாக்டர்கள் சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.

‘’ கங்கம்மா மரணம் வருத்தம் அளிக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்படும். பின்னர் இழப்பீடு அளிக்கப்படும்’’ என்று ட்விட் செய்துள்ளார், முதல்வர், எடியூரப்பா.

அனுதாபம் சொல்லியாச்சு. அடுத்த வேலைய பாருங்க.

– ஏழுமலை வெங்கடேசன்

You may have missed