கேரளப் பல்கலைத் தேர்வில் முதலிடம் – பீகார் புலம்பெயர் தொழிலாளியின் மகள் சாதனை..!

எர்ணாகுளம்: பீகாரிலிருந்து பல்லாண்டுகள் முன்பு கேரளாவுக்கு புலம்பெயர்ந்து வந்த ஒரு தொழிலாளியின் மகள், பல்கலைக்கழக தேர்வில் முதலாவதாக வந்து சாதித்துள்ளார்.

பாயல் குமாரி என்பதுதான் அந்த மாணவியின் பெயர். அவருக்கு 4 வயதாக இருந்தபோது அவரின் குடும்பம், பீகாரிலிருந்து, கேரளாவின் எர்ணாகுளம் பகுதிக்கு குடிபெயர்ந்தது.

தனது நான்கு பிள்ளைகளையும் எப்படியேனும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்று கடுமையாக உழைத்தார் அந்த தொழிலாளியான பிரமோத் குமார்.

மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மார்தோமா மகளிர் கல்லூரியில் வரலாறு & தொல்லியல் பட்டப் படிப்பை மேற்கொண்டார் பாயல் குமாரி. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தேர்வில், 85% மதிப்பெண்களைப் பெற்று பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக தேர்வாகியுள்ளார்.

இவருக்கு, 10ம் வகுப்பு படிக்கும்போதே, தொல்லியல் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கேற்ப அத்துறையை தேர்வுசெய்து படித்தார்.

தந்தையின் பொருளாதார சிக்கல்களால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடலாம் என்று யோசித்தபோதெல்லாம், இவரின் வரலாற்று ஆசிரியர்கள்தான், இவரை ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். இவர், 10ம் வகுப்பில் 85% மதிப்பெண்களும், பன்னிரெண்டாம் வகுப்பில் 95% மதிப்பெண்களும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, பலருக்கும் வழக்கமான சில துறைகளின்மீது ஆர்வம் ஏற்படுவது இன்றைய நடைமுறையாக இருக்கையில், இந்த ஏழை மாணவிக்கு, வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டிருப்பதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்!