புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக, இந்திய தலைநகரிலிருந்து தங்களின் சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பையிலிருந்து தங்களின் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், மீண்டும் மும்பைக்கு திரும்பி வருவதாக, நமது இணையதளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதேசமயம், தங்கள் ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களை, பெரிய கட்டுமான நிறுவனங்கள் பல, கூடுதல் சலுகைகளை அறிவித்து மீண்டும் அழைப்பதாகவும், அந்த அழைப்பை பலர் ஏற்றுக்கொண்டாலும், பலர் மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஸா போன்ற மாநிலங்களில் உள்ள மோசமான பொருளாதார கட்டுமானம், மிகக் குறைந்த கூலி, வாழ்விற்கான உத்தரவாதமின்மை உள்ளிட்ட காரணங்கள், நடந்துவிட்ட கசப்புகளையெல்லாம் விரைவில் மறந்து, கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றாலும்கூட, மீண்டும் டெல்லி, மும்பை போன்ற பெருநகர்களை நோக்கி புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் திருப்புகின்றன.
இந்நிலையில், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் டெல்லியை நோக்கி, மீண்டும் வரத் துவங்கிவிட்டனர் புலம்பெயர் தொழிலாளர்கள். “எனக்கு இங்குதான் வேலை இருக்கிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, நான் எனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியதானது. ஆனால், எனது பணியைத் துவங்க, நான் மீண்டும் இங்கேயே வந்துவிட்டேன்” என்று கூறினார் ஒரு புலம்பெயர் தொழிலாளி.