டெல்லி:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டாம் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக சுமார் 45 நாட்களுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 4ந்தேதி முதல் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல, ரயில் மற்றும் பேருந்துகளுக்கு மத்திய,மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன. இதனால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இணையதளம் ஒன்றில் பேசிய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்,  சொந்த ஊர் செல்வதில் தீவிரமாக இருப்பவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை உங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துக்கு நாங்கள் ஏற்பாடு செய்து வந்தோம். எனவே தயவுசெய்து நீங்கள் டெல்லியை விட்டு செல்லவேண்டாம். இங்கு ஊரடங்கு நீண்ட காலத்துக்கு இருக்காது. நிலைமை விரைவில் சீரடையும்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.