நரக வேதனை அனுபவம் – மீண்டும் புலம்பெயர தயாரில்லாத உ.பி. தொழிலாளர்கள்!

லக்னோ: மோடி அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கால், நரக வேதனையை அனுபவித்து, தங்களின் சொந்த ஊர் திரும்பியிருக்கும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், இனி மீண்டும் வேலைக்காக வெளியில் செல்லப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.

காய்ந்த ரொட்டியை சாப்பிட்டுக் கொண்டு ஊரிலேயே இருப்போமே தவிர, வேலைதேடி வெளிமாநிலம் செல்லப்போவதில்லை என்றுள்ளனர் அவர்கள். மேலும் தங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான கல்வியை அளிக்க முடியாவிட்டாலும்கூட, சொந்த கிராமத்திலேயே நிலைக்கப் போவதாக கூறியுள்ளனர்.

அவர்கள் கூறியிருப்பதாவது, “சிரமமான காலங்களில், வெளியில் உள்ள யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. எங்களது நலம் விரும்பிகள் இங்குதான் இருக்கிறார்கள் என்பதை இந்த ஊரடங்கு எங்களுக்கு நிரூபித்துவிட்டது” என்றுள்ளனர்.

பலர் மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பணிபுரிந்தவர்கள் மற்றும் தங்கள் பிள்ளைகளை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி படிக்க வைத்துவந்துள்ளனர். ஆனால், தொடர் ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில், வேறு வழியில்லாமல் நடந்தோ, சிறப்பு ரயில்களிலோ நரக வேதனையை அனுபவித்து ஊர் போய் சேர்ந்துள்ளனர்.

அங்கும் அவர்களுக்கு வேறு எந்த நல்ல வாய்ப்பும் இல்லையென்றாலும் கூட, ஆபத்து காலங்களில் யாரும் உதவிசெய்யாத இடங்களுக்கு அவர்கள் செல்ல தயார் இல்லை என்பதையே பெரும்பாலானோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.