டெல்லி: தலைநகர் டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு டெல்லியின் லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு காத்திருந்த புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று மீது கிருமிநாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.
அதாவது, சிறப்பு “ஷ்ராமிக்” ரயிலில் ஏறும் முன்பு நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் லஜ்பத் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே கொரோனா பரிசோதனைக்காக திரண்டிருந்தனர். அவர்கள் மீது இப்படி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான வீடியோவும் வைரலானது.
இதையடுத்து, தெற்கு டெல்லியின் நகராட்சி அதிகாரிகள் மன்னிப்பு கோரி உள்ளனர். கிருமி நாசினி தெளிப்பில் ஈடுபட்டுள்ள நபர், ஸ்ப்ரேவை கையாளும் போது அதன் அழுத்தத்தை சமாளிக்கமுடியவில்லை. அதன் காரணமாக ஒட்டுமொத்தமாக காத்திருந்தவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சூழலில் மிகவும் கவனமாகவும், கவனமாகவும் இருக்குமாறு ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்த அதிகாரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.