வாஷிங்டன் :

மெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் சுயகட்டுப்பாட்டை இழந்து தான்தோன்றி தனமாக நடந்து கொள்கிறார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பிலோஸி கூறியிருந்தார்.

அரசியல் அமைப்பு சட்டத்தின் 25-வது திருத்தத்தின் அடிப்படையில், டிரம்பை அதிபர் பதவியில் இருந்து துணை அதிபர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் நீக்கவேண்டும் என்று மைக் பென்ஸ் இடம் பிலோஸி கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள துணை அதிபர், டிரம்பை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.

தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்காத டிரம்ப், பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருந்தார், அனைத்து வழக்குகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த 6-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடந்தது.

வாக்கெடுப்பு நாளன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் தனது கட்சி ஆதரவாளர்களை ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் டிரம்ப். ஆர்பாட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

துணை அதிபர் பென்ஸ் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உயிருக்கு அஞ்சி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

சபாநாயகர் பிலோஸி-யின் அறைக்குள் புகுந்த வன்முறையாளர்கள், அவரது லேப்டாப்-பை தூக்கி சென்றனர், அதோடு சபாநாயகர் முன் வைக்கப்பட்டிருக்கும் மைக் அமைந்திருக்கும் மேடையையும் தூக்கி சென்றனர், அவரின் நாற்காலி உள்ளிட்டவை கேலிப்பொருளாகியது.

இந்த முழு முற்றுகையும் சபாநாயகரை மையப்படுத்தி நடைபெற்றது என்று சொல்லுமளவிற்கு இருந்தது. இந்த வன்முறையில், 2 போலீசார் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, டிரம்ப்-பின் அதிகாரத்தையும் பதவியையும் பறிக்க நாட்டின் ராணுவ தலைமை அதிகாரி, மற்றும் துணை அதிபர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினார் பிலோஸி.

மேலும், அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜனநாயக கட்சியினர் இன்று (13-1-2021) கொண்டுவருகின்றனர், இதற்கு பிலோஸி இசைவு தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில், குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே டிரம்ப்-புக்கு எதிராக வாக்களிக்க கூடிய சூழல் உள்ளது.

இந்நிலையில், நாட்டின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு அதிபர் டிரம்ப்-பை பதவி நீக்கம் செய்ய முடியாது மேலும், இது தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் பிலோஸிக்கு பதிலளித்திருக்கிறார் பென்ஸ்.

இதனை தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையில், 25வது சட்ட திருத்தத்தை செயல்படுத்த கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு 223 பேர் ஆதரவளித்துள்ளனர், இந்த தீர்மானத்தின் அடிப்படையில் டிரம்ப் மீது நடவடிக்கை எடுக்க கோரி பென்ஸ்-க்கு மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பிலோஸியின் கோரிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்திருப்பது அதனை தொடர்ந்து அவையில் தீர்மானம் நிறைவேறி இருப்பது போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளால், டிரம்ப் ஆட்சியின் இறுதி நாட்களில் அமெரிக்க அரசியல் வரலாற்றில் என்ன மாற்றம் நிகழ போகிறது என்று தெரியாமல் உலகமே காத்திருக்கிறது.