26/11 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் பொறுப்பு….நவாஸ்ஷெரீப்

டில்லி:

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக மக்களை துப்பாக்கியால் சுட்டு தள்ளினர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 18 போலீசார் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

பாதுகாப்பு படையினரின் பதிலடியில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்ற இந்தியாவின் குற்றசாட்டை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் வெளியாகும் டான் நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறுகையில், ‘‘ பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டில் உள்ளன. அவர்கள் எல்லை தாண்டி மும்பைக்கு சென்று 150 பேரை கொல்ல நாம் அவர்களை அனுமதித்தோமா?. இது குறித்து எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். பின்னர் ஏன் நம்மால் வழக்கு விசாரணையை முடிக்க இயலவில்லை?’’ என்று தெரிவித்தார்.