காஷ்மீர் ராணுவ அதிகாரி பெண்ணுடன் ஓட்டலில் கைது

ஸ்ரீநகர்

காஷ்மீர் ராணுவ அதிகாரி மேஜர் லீதுல் கோகாய் ஸ்ரீநகர் ஓட்டலில் ஒரு பெண்ணுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்ற வருடம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பதகாம் மாவட்டத்தில் ஒரு ராணுவ அதிகாரி உள்ளூர் வாலிபர் ஒருவரை தனது வாகனத்தில் மனித கேடயமாக கட்டிச் சென்றார்.   இந்த விவகாரம் கடும் பரபரப்புக்கு உள்ளாகியது.   அந்த ராணுவ அதிகாரியின் பெயர் மேஜர் லீதுல் கோகாய் என்பதாகும்.   அவர் தற்போது மற்றொரு பரபரப்பை உண்டாக்கி உள்ளார்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒரு தங்கும் விடுதியில் இருந்து நேற்று காவல்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.  அந்த அழைப்பில் பேசிய தங்கும் விடுதியின் மேலாளர் தனது விடுதியில் வந்து ஒருவர்  கைகலப்பில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்தார்.  அங்கு விரைந்த காவல்துறையினர் கைகலப்பில் ஈடுபட்டவர் மேஜர் லீதுல் கோகாய் என்பதையும் அவருடன் ஒரு இளம்பெண் இருப்பதையும் கண்டு அதிர்ந்தனர்.

அத்துடன் அவர்களுடன் சமீர் என்பவரும் உடன் இருந்துள்ளார்.    அவர்களை கைகலப்பு செய்ததற்காக கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.  அங்கு நடத்திய விசாரணையில் மேஜர் அந்தப் பெண்ணுடனும் சமீருடனும் அந்த தங்கும் விடுதிக்கு சென்று அறை கேட்டுள்ளார் என்பதும்   அவர்கள் மூவரும் ஒரே அறையில் தங்கக் கூடாது என விடுதி சட்டத்தின்படி மேலாளர் மறுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.   அதை ஒட்டி  பேச்சு வார்த்தைகள் தடிக்கவே மேஜர் கைகலப்பில் ஈடுபட்டது  கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தற்போது இது குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.   இந்த வழக்கு குறித்து மேஜரின் ராணுவ பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   செய்தியாளர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர்.   இதுவரை மேஜர் தரப்பில் இருந்தும் ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்தும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.