சென்னை:

மிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுடன், பால், பழங்களும் வழங்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினசரி மதியம் முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.  மேலும், 10வது வகுப்பு மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் தேர்வு நேரங்களில் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொள்ளும்போது, அவர்களுக்கு சுண்டல் போன்ற பயிறு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் பால் பழங்கள் வழங்குவது குறித்சூது  தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே புதுச்சேரி மாநில அரசு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலையில் பால், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதுபோல தமிழ்நாட்டிலும் பால், பழங்கள் வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆவின் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதால் சத்துணவு மையங்களுக்கு தேவையான பால் சப்ளை செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக  ஆவின்  ஆய்வு செய்து வருவதாகவும், பால் பாக்கெட் வழங்கும்போது, அது கெட்டுப்போக வாய்ப்பு உள்ளதால்,  பால் பவுடர்களை வழங்கி, அதன்மூலம் சூடான பால் தயாரித்து வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், சீசனுக்கு தகுந்தவாறு பழங்கள் வழங்குவது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும்  கூறப்படுகிறது.

மேலும், இதற்கான நிதி ஆதாரங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் போன்றவை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.