டில்லி,

ந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருவதாக வருமான வரித்துறை புள்ளி விவரம்  தெரிவித்து உள்ளது. இதன்படி கடந்த 2015-2016ம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 23.5 சதவீதம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக கூறி உள்ளது.

நாட்டில் வருமான வரி செலுத்துபவர்களின் கணக்கின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2015-16-ம் நிதியாண்டில் வருமான வரி செலுத்தியவர்கள் குறித்து ஆய்வு செய்ததில்,   அதில் ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் இருப்பவர்களின் எண்ணிக்கை  23.5 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த 2014-15ம் ஆண்டு வருமான வரி தாக்கல் செய்திருந்தபோது 48 ஆயிரம் பேர் தங்கள் வருமானம் கோடிக்கு மேல் இருப்பதாக தெரிவித்திருந்தாகவும், ஆனால், 2015-16ம் நிதி ஆண்டில் 59,830  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வருமானம் 1 கோடிக்கும் மேல் இருப்பதாக வருமான வரி தாக்கலின் போது தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு வருடத்தில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 23.05 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருமான வரித்துறை பட்டியல் வெளியிட்டு உள்ளது.

அதில், ரூ. 1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான வருமான வரம்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 55,331 என்றும்,  ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான வருமான வரம்பில் 3,020 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில்  1,156 பேர் மட்டும் ரூ.10 கோடி முதல் ரூ.25 கோடி வரை வருமானம் ஈட்டுகின்றனர் என்றும், இந்தியாவில் ஒரே ஒரு நபர் மட்டும் தனது ஆண்டு வருமானம் ரூ.500 கோடிக்கு அதிகமாக உள்ளதாக கணக்குக் காட்டியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

2015-16-ல் அவரது ஆண்டு வருமானம் ரூ.721 கோடியாகும். முந்தைய நிதியாண்டில் மொத்தம் 7 பேர் தங்கள் வருமானம் ரூ.500 கோடிக்கு மேல் இருப்பதாக கணக்குக் காட்டியிருப்பதாகவும் கூறி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வருமான வரித்துறை அதிகாரி,  நாட்டில் உள்ள அனைவரும் முறையாக தங்கள் வருமானத்துக்கு கணக்குக் காட்டினால் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறி உள்ளார்.