ஜோதி தரிசனம்: வடலூரில் அமைச்சர்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கடலூர்,

தைப்பூச திருவிழாவையொட்டி வடலூரில் ஜோதி தரிசனம் காண லட்சகணக்கான பக்தர்கள் திரண்டனர். இதன் காரணமாக எங்கு நோக்கிலும் மனித தலைகளே காணப்பட்டன.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு தைப்பூசத் திருவிழாவை யொட்டி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

இன்று காலை  6 மணி அளவில் வள்ளலாரின்  ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. பின்னர் முற்பகல் 10 மணி, மதியம் 1 மணிக்கும் பக்தர்களுக்கு தரிசனம் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இரவு 7 மணி, 10 மணிக்கும், நாளை காலை 5.30 மணி அளவிலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜோதி தரிசனத்தைக் காண  லட்சகணக்கான பக்தர்கள் வடலூரில் திரண்டனர்.

மேலும், தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், காமராஜ், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் கடலூர் கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் ஜோதி தரிசனத்தை காண அங்கு வந்திருந்தனர். அவர்கள் ஜோதி தரிசனத்தை கண்டு பரவசமடைந்தனர்.

தைப்பூச திருவிழாவை யொட்டி கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.