புதுடெல்லி: இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் குறுகிய கால சேவையை அனுமதிக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக துறைசார்ந்த வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ராணுவத்தில் திறமையான இளைஞர்களைச் சேர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நடைமுறையின்படி, குறுகியகால சேவையாக, ராணுவத்தில் இணைவோர் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
ஆனால், புதிய சீர்திருத்த திட்டத்தில், அதனை 3 ஆண்டுகளாக குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான திட்ட வரையறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றார் அவர்.
இந்தப் புதிய திட்டம், ராணுவத்தை நோக்கி இன்னும் அதிக இளைஞர்களை ஈர்க்கும் என்றும், இதன்மூலம், பல திறமையான நபர்கள் ராணுவத்திற்கு கிடைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.