குறைந்த பட்ச கேபிள் டிவி கட்டணம் ரூ.154: டிராயின் புதிய அறிவிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி

டில்லி:

நாடு முழுவதும் வரும் 29-ம் தேதி முதல், ஒளிபரப்பாகும் கேபிள் டிவி, டி.டி.ஹெச். சேனல்கள் பார்ப்பதற்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுவதாக டிராய் அறிவித்து உள்ளது.

இதன்படி ஒருவர் குறைந்த பட்சமாக ரூ.153.40 பைசா கட்ட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நாம் விரும்பி காணும் சேனல்களுக்கு தனித்தனி கட்டணம் கட்ட வேண்டிய சூழலும் உருவாகி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

நாடு முழுவதும் பெரும்பாலான கிராமப்பகுதிகளில் இன்றளவும் கேபிள்டிவி மூலம் சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பல ஊர்களில் இன்னும் செட்டாப் பாக்ஸ் என்ற கருவியே கிடையாது.  பொதுவாக உள்ள அனைத்து சேனல்களுக்கும் சேர்த்து குறைந்த பட்சம் 75 ரூபாய் முதல் அதிக பட்சமாக ரூ.100 வரை கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இனிமேல் ஒவ்வொரு சேனலுக்கும் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கேபிள் டிவி அல்லது டிடிஎச் மூலம்  தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாள ருக்கும் நெட்வொர்க் கெபாசிடி கட்டணமாக 130 ரூபாய் உடன்  18 சதவிகித ஜிஎஸ்டி வரியான 23 ரூபாய் 40 பைசாவுடன் சேர்த்து மொத்தம் 153 ரூபாய் 40 பைசா செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டணத்துடன் மக்கள் விரும்பி பார்க்காத தூர்தர்ஷன் உள்பட 100 சானல்கள் வரை காண முடியும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், கட்டணமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சேனல்களின் பட்டியலில் இருந்து, கூடுதலாக வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு 25 சேனல்களுக்கும், 20 ரூபாய் கட்டணத்தையும் அதற்கான 18 சதவிகித GST வரியாக 3 ரூபாய் 60 பைசா சேர்த்து மொத்தம் 23 ரூபாய் 60 பைசா செலுத்த வேண்டும்.

இந்த 25 சேனல்களில் ஏதாவது கட்டண சேனல்களாக இருந்தால், இந்த 23 ரூபாய் 60 பைசாவுடன் சேர்த்து, அந்த கட்டண சேனலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை தனித்தனியாக ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு கட்டண சேனலுக்குமான விலை விவரங்கள், அந்தந்த சேனல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளன.

கேபிள்,டிடிஎச், ஐபிடிவி உள்ளிட்ட எந்த இயங்குதளமாக இருந்தாலும், மாற்றங்களின்றி ஒரே மாதிரியாகவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக தங்களது விருப்ப சேனல்களை மாதந்தோறும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

இதன்படி வாடிக்கையாளர் விரும்பும் கட்டண சேனல்களுக்கு மட்டுமே பார்க்கும் வசதி ஏற்படும் என்றும், நாம் பார்க்கும் சேனல்களுக்கு உரிய கட்டணம் மட்டுமே செலுத்த முடியும், தேவையற்ற கட்டணம் செலுத்த வேண்டியது இருக்காது என்று தெரிவித்து உள்ளது.

டிராயின் இந்த புதிய அறிவிப்பு தொலைக்காடசி  விளம்பர வருமானத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று  கூறப்படுகிறது.

இந்த புதிய நடைமுறை  வரும் 29ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தற்போது நடைமுறை யில் உள்ள முறை  வருகிற 28 ந்தேதி இரவுடன் முடிவடைவதாகவும் அறிவிதது உள்ளது.

வரும் 29ந் தேதி முதல் வாடிக்கையாளர்கள் விரும்பும் கட்டண சேனல்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் உடனே தங்களது டிடிஎச் அல்லது கேபிள் டிவி ஆபரேட்டர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான சேனல்கள் குறித்து முடிவு செய்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செட் ஆப் பாக்ஸ் இல்லாத அனலாக் கேபிள் இணைப்புகளில் சேனல்கள் வழங்க ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி