டில்லி:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அறிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

அதில், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 20 சதவிகித ஏழை மக்களுக்கு குறைந்த பட்ச ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ்  உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  உதவித்தொகையானது  அதிகபட்சமாக வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வரை, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், மாதம் ஒன்றுக்கு அதிக பட்சமாக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக ஓரு ஏழை குடும்பத்தினர் மாதாந்திர ஊதியம் ரூ.8ஆயிரம் என்று வைத்துக் கொண்டால், குறைந்த பட்ச ஊதிய உறுதித் திட்டத்தின்படி, அவருக்கு அந்த மாதம் ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். இதன் காரணமாக அவரது மாதாந்திர வருமானம் ரூ.12 ஆயிரத்தை எட்டும்.

12 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சம்பாதிக்கும் மக்களுக்கு ஊதியத்தை ஈடுகட்டும் நோக்கில் இந்த அசத்தலான திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வர இருப்பதாக அறிவித்து உள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், இந்த திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்த ராகுல்காந்தி,   இதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 25 கோடி ஏழை குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்றும் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 3ஆயிரத்துக்கும் அதிகமான பல்வேறு நலத்திட்டங்கள் உள்ள நிலையில், ஏராளமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அவைகள் செயல்படுத்தப்படாமல்  உள்ளன. அந்த திட்டங்களை கண்டறிந்து, அதற்கான நிதியை, ஏழைகளின் வாழ்வாதாரத்துக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக நாட்டில் வறுமையை ஒழிப்போம் என்றும் ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.