புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்துக்கு உலகளாவிய வரவேற்பு கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை தரவு ஆய்வகர்( டேட்டா அனலைசிஸட்) பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.


இது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி டிஎன்ஏ இணையத்துக்கு அளித்த பேட்டியில், “குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் உடனே உதித்த திட்டமல்ல. இது தொடர்பாக உலக அளவில் கலந்தாலோசித்த பின்னரே அறிவிக்கப்பட்டது.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள சூழலில், சண்டிகாரில் நடந்த விவசாயிகள் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.

குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை அறிவிக்க இந்த இடம்தான் சரியாக இருந்தது. ஏழைக்கான ஆதாரம் என்ன என்று கேட்கிறார்கள். அவர்கள் பெறும் வருமானத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுவார்கள்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, உணவு, விவசாயம்,எரிவாயு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியம் ரத்தாகாது.

யார் கையிலும் இப்போது பணம் இல்லை. விவசாயிகள் வருவாய் இன்றி தவிக்கிறார்கள். இந்நிலையில், அவர்கள் கையில் நேரிடையாக பணம் சென்றால், அது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்திய பொருளாதாரமும் மதிப்புள்ளதாக இருக்கும்.

வேட்பாளர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து கொடுப்பது மட்டுமே எங்கள் பணி, வேட்பாளர் தேர்வு செய்வதற்கு காங்கிரஸ் தேர்வுக் குழு உள்ளது.

வீட்டுக்கு வீடு காங்கிரஸ் என்ற அடிப்படையில் ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் உறுப்பினர்கள் சேர்க்கையை பதிவு செய்யும் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம்” என்றார்.