டில்லி

ம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் மக்களவையில்  பொருளாதார வீழ்ச்சி குறித்துப் பேசியதற்கு மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் பதில் அளித்தார்.

நேற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.    அப்போது மக்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் பக்வந்த் மான், ”நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.   இந்த வீழ்ச்சி 5% அடைந்து தற்போது அதற்குக் கீழும் செல்லும் நிலையில் உள்ளது” என தெரிவித்தார்.   இதனால் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் மிகவும் கோபம் கொண்டார்.

அனுராக் தாக்குர் தனது பதிலில், “மத்திய அரசு நம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  நமது நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்துக்குக் கீழ் வீழ்ச்சி அடையும் நிலையில் இல்லை.   இத்தகைய பொருளாதார வீழ்ச்சி குறித்த புள்ளி விவரங்களை எங்கு இருந்து பெற்றீர்கள்?  அந்த விவரங்களை எனக்குக் காட்டுங்கள் பார்ப்போம்.

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகின்றது. வரும் 2025ம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.  கடந்த 2014-2019ம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 7.5 சதவீதம் ஆகும். ஜி-20 நாடுகளிலேயே அதிகபட்ச சதவீதமாகும்.

இவ்வாறு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக இயங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக, தொழிற்சாலைகள், அந்நிய நேரடி முதலீடு மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலமாகக் கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது முதலீட்டு நடவடிக்கையை அதிகரிக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியானது 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர், எளிதாகத் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் வரிசையில் இந்தியா முன்னேற்றம் பெற்றது. 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் 2018ம் ஆண்டில் 77வது இடத்தில் இருந்த இந்தியா 2019ம் ஆண்டு 63வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.