அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டு எதிரொலி: முதல்வரை சந்தித்த ராதாகிருஷ்ணன்

சென்னை:

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெரபரப்பு தகவல்களை தெரிவித்த அமைச்சர் சிவி சண்முகம், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீதும் புகார் கூறினார்.

இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் முதல்வர் இல்லத்துக்கு சென்று எடப்பாடியை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று விழுப்புரத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்,  ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியவர், சுகாதாரத்துறை செயலாளர் குறித்தும் குற்றம் சாட்டினார்.

ஆறுமுகாசமி விசாரணை ஆணையத்தில் இரண்டு நாள் ஆஜராகி, ஜெயலலிதா மரணம் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில், அவரது கொடுத்துள்ள விளக்கம் காரணமாக அவரை விசாரிக்க வேண்டும் என்றும் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டினார்.

“சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  ஜெயலலிதா மரணம் தொடர்பாக முரண் பாடாக பேசி வருகிறார் .அதனால் அவரை காவலில் எடுத்து ஆணையம் விசாரிக்க வேண்டும். அதேபோல, மாஜி தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவையும் ஆறுமுக சாமி கமிஷன் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்” என்றார்.

ஒரு அரசுதுறை செயலாளர் மீது அமைச்சரே பகிரங்கமாக குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்,  “ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராகி 2 முறை விளக்கம் அளித்து விட்டேன். நான் யாருடனும் எந்த சதியிலும் ஈடுபட வில்லை. இதற்கு மேல் இதில் பேச முடியாது. காரணம், விசாரணை நடந்து வருகிறது” என்று சொன்னார்.

அதையடுத்து முதல்வரை அவரது கிரின்வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்து பேசினார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.