‘அம்மா கொள்ளையடித்தார்:’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

ம்மா கொள்ளையடித்த பணத்தை டிடிவி திருடிவிட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார். இது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவினர் மட்டுமல்லாது தமிழக மக்களையும், தன்னை அம்மா என்று அழைக்க வேண்டும் அன்புக் கட்டளை விடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

அவர் பணம் கொள்ளையடித்ததாக தற்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஏற்கனவே ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் என்று உளறி கொட்டிய நிலையில், ஜெ.வை விஜயகாந்த் திட்டியதால்தான் அவருக்கு பேச முடியவில்லை என்றும் புதுகுண்டு வீசினார்.

அதைத்தொடர்ந்து  ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விழாவில் பேசும்போது, , ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தமிழகத்தில் சிறப்பான நடைபெற்று வருகிறது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது   ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டதாக  பேசி அடுத்த குண்டை வீசியுள்ளார்.

அமைச்சர் ஒருவரே இவ்வாறு கட்டுப்பாடின்றி பேசிவருவது அதிமுகவினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற  அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் “அம்மாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் திருடி 18 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்துள்ளார்” என்று பேசினார்,. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் சீனிவாசசனின் இந்த அதிரடி பேச்சால் மேடையில் அமர்ந்திருந்த அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் வேறு டாபிக்கில் தனது கவனத்தை திரும்பி பேசி முடித்தார்.

அதிமுக அமைச்சரின் இந்த பேச்சு காரணமாக  கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  சமூக வலைதளங்களில் அமைச்சரின் பேச்சு குறித்து காரசாரமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.