கொரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணுவின் 90% நுரையீரல் பாதிப்பு: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சென்னை: மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவின் 90 சதவிகித நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ள நிலையில், எக்மோ கருவி மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் 90 சதவிகித நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.

இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு  கடந்த 13-ம் தேதி கடுமையான மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இணை நோய்கள் உள்ளதோடு, 90 சதவிகித நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது எக்மோ கருவி மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் அவர்  உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து, தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களுடன் பேசினார்.

மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயகுமார் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில், துரைகண்ணுவை மருத்துவ வல்லுநர்கள் குழு மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.