துரைக்கண்ணுவின் உடல் தஞ்சை ராஜகிரியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!

தஞ்சை: மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் தஞ்சை ராஜகிரியில் உள்ள தோட்டத்தில், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் துரைக்கண்ணுவின் உருவபடத்தின் முன் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு வந்தடைந்தது. அமைச்சர் துரைக்கண்ணுவின் இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந் நிலையில் தஞ்சை ராஜகிரியில் உள்ள தோட்டத்தில், 63 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம்  செய்யப்பட்டது.