சென்னை:

மிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 31-ந்தேதி நள்ளிரவில் காலமானார். அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர் மறைவைத் தொடர்ந்து, பாபநாசம் தொகுதி காலியாகிவிட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை சபாநாயகர் ப.தனபால் நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தில் இத்துடன் 4 தொகுதிகள் காலியாக உள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து, 2 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. காலியாக அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா பரவலை காரணம் காட்டி இந்த இடைத்தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளதாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் மாதம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மரணம் அடைந்தார். அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் 6 மாதம் முடிவடையாத சூழ்நிலை உள்ளது. எனவே, அந்த நேரத்தில்தான் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.

இன்னும் 5 மாதங்களுக்குள் சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கான சூழ்நிலை இருப்பதால், பாபநாசம் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டாலும், அங்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை.