ஜெ. இல்லாததால் திரையுலகினருக்கு குளிர்விட்டு போச்சு….! ஜெயக்குமார் காட்டம்

சென்னை:

ஹீரோக்கள் தங்களை முன்னிலைப்படுத்த பிறரை அவமதிக்கின்றனர் என்றும், ஜெயலலிதா இல்லாததால் திரையுலகினருக்கு குளிர்விட்டு போச்சு என்றும்  அமைச்சர்  ஜெயக்குமார் காட்டமாக கூறினார்.

இன்று வீரமா முனிவர் பிறந்தநாளை யொட்டி அவரது படத்திற்கு மாலை மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இப்போது வசனம் பேசும் ஹீரோக்ள் ஜெயலலிதா இருந்தபோது பேச முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

ஹீரோக்களுக்கு  ஆசை இருப்பது தவறில்லை..  அவர்கள் கொள்கைகளை சொல்லி, லட்சியங் களை சொல்லி படம் எடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். தன்னை முன்னிலைப்படுத்த பிறரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காட்டமாக கூறினார்.

மேலும், தமிழக சட்டஅமைச்சர் சொன்னதைபோல, திரைப்படம் என்பது மக்களுக்கு நல்ல அம்சங்களை சொல்லிக்கொடுப்பதாக அமைய வேண்டும்.. அதுபோலவே எம்ஜிஆர் இருந்தார். வரலாற்று நாயகனாக போற்றப்பட்டு வருகிறார்.

இவர்களெல்லாம் புரட்சி தலைவர் எம்ஜிஆராக வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.. ஆனால், அவர்கள் என்ன அழுது புரண்டாலும், அவர்களுக்கு மக்கள் எம்ஜிஆர் போல அங்கீகாரம் கொடுக்க மாட்டார்கள்…  தங்களை முன்னிப்படுத்த மற்றவர்களின் எண்ணங்களை புண்படுத்தாதீர்கள் என்றார்.

கோமளவல்லி என்ற பெயர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,  அம்மாவுடைய இயற்பெயர் என்பது அனைவருக்கும் தெரியும்… அதை ஏன் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், இது ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் செயலாக உள்ளது… அதை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

ஜெயலலிதா இல்லாததால் திரைத்துறையினருக்கு குளிர்விட்டு போய்விட்டதாகவும், ஹீரோக்கள் தங்களை முன்னிலைப்படுத்த பிறரை அவமதிப்பதாகவும், மற்றவரின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கும் பட்சத்தில், படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

பண மதிப்பிழப்பு குறித்து கேட்ட கேள்விக்கு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கான விடை 2019ம் ஆண்டு தேர்தலில் தெரிய வரும் என்றும் கூறினார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை சந்திக்க இருப்பது குறித்த கேள்விக்கு,  அவர்கள் யாரை சந்தித்தாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. முடிந்தால் உலகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் சந்திக்கட்டும் என்றார்.

தொடர்ந்து, ஸ்டாலின்  சந்திரபாபுநாயுடு சந்திப்பு குறித்த கேள்விக்கு  கடந்த  2016-ம் ஆண்டு கூட வலுவான கூட்டணிதான் வைத்தார்கள். ஆனால் என்ன ஆச்சு? ரிசல்ட் ஜீரோ. அதேபோல் 2019-லும், 2021-லும் ஜீரோ தான் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.